தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததுள்ளதால் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தலைநகர் டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேஷ், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேஷ் ஆகிய மாநிலங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் வெள்ளம் சாலையோரம், பகுதிகளில் கரைபுரண்டதோடு வீடு, கடை, வளாகம், கல்லூரி ஆகிய இடங்களிலும் புகுந்துள்ளது. 

Advertisment

டெல்லியில் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். யமுனை ஆற்றில் நீர்மட்டம் அபாய அளவான 205.33 மீட்டரை தாண்டி இரண்டு மீட்டர் அதிகமாக 207.33 மீட்டர் வரை உயர்ந்துள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு முன் 1963ஆம் ஆண்டு 207 அடிக்கு உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கரையோர பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். மேலும் 12,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதற்காக, 25 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை தேசிய பேரிடர் அணியினர் மீட்டு வருகின்றனர். 

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு 40 முக்கிய இரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு கடும் அவதிக்கு ஆளாகியுள்ளன. மழை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி வானிலை ஆய்வு மையம் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் இதே நிலை இந்த வாரம் முழுவதும் நீடிக்கும் என தெரிவித்துள்ளது. 

இதே போல், ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியிலும் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் அதிகரித்ததால் அது மக்கள் வசிக்கும் பகுதியில் சென்று சூழ்ந்துள்ளது. அங்கு அக்னூர் பகுதியில் சிக்கி தவித்த 44 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். மீட்பு பணிகள் தொடர்கிறது. உத்தர பிரதேசத்தில் உள்ள ஃபெரோஸ்பூர் பகுதியில் ஒரு கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகுகள்மூலம் நிவாரணப் பொருட்கள் கொடுக்கப்பட்டது. அதே போல் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணியாளர்கள் சென்றடைய முடியாத நிலை நீடிக்கிறது, இதனால் ட்ரோன்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த கனமழை பாதிப்பால் உயிர் சேதங்களும் நடந்துள்ளது. பஞ்சாபில் இதுவரை 37 பேர் இறந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பள்ளி கல்லூரிகளுக்கு வரும் 7ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இதுவரை இல்லாத அளவு இந்த வெள்ளத்தால் மாநிலத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

இதுவரை இந்த வெள்ள பாதிப்பால் பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 500ஐ நெருங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இமாச்சலில் மட்டும் மழை பாதிப்பைத் தாண்டி நிலச்சரிவு சம்பவம் காரணமாகவும் உயிர்பலி எண்ணிக்கை 371ஆக இருக்கிறது.