Heavy rains continue to fall - Alert issued for 14 districts Photograph: (rain)
நேற்று (18/07/20250 இரவு சென்னை புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. பெய்த கனமழை காரணமாக தரமணி, நெமிலிச்சேரி ஆகிய பகுதிகளில் ஒரே இரவில் 6 சென்டிமீட்டர் மழையானது பதிவாகியுள்ளது. இந்த திடீர் கனமழைக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக திடீர் கனமழை பெய்ததாக' தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (19/07/2025) காலை 10 மணி வரை 14 மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பின்படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரதான அருவி மற்றும் ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பொழிந்து வருகிறது. கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, முருக்கோடை ஆகிய பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது.
தொடர் மழைப்பொழிவு காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம் 96.89 அடியாக உள்ளது. நீர் இருப்பு 26.3 டிஎம்சி ஆக உள்ளது. நீர்வரத்து 4,607 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1,255 கனஅடியாக உள்ளது.