Heavy rains continue - Orange for 4 districts Photograph: (rain)
வடகிழக்கு பருவமழை தொடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் அமுதா தெரிவித்திருந்த நிலையில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் மாரண்டஹள்ளி பகுதியில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்து வரும் ஏழு நாட்களுக்கு கனமழை நீடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்று திருவாரூர், நீலகிரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லை, தென்காசி, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், மதுரை, கரூர், கோவை, திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
நாளையைப் (12/10/2025) பொறுத்தவரையில் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது, நாளை மறுநாள் (13/10/2025) தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.