வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், வங்கக் கடலில் ‘டிட்வா’ புயல் உருவாகியது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதே போன்று புதுச்சேரியிலும் தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு நாட்களில் 28 சென்டிமீட்டர் அளவிற்குக் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. 

Advertisment

இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக அப்பகுதியில் உள்ள குமரன் நகர், நியூ சன் சிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள், தாழ்வான நிலையில் உள்ளன. இதனால் அங்கு இடுப்பளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளன. இதனால் அங்குள்ளவர்களில் பலர், அவர்களது உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்துள்ளனர். மற்றவர்கள் அவர்களது வீடுகளிலேயே தங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் தான் அங்குள்ளவர்கள் கடந்த சில நாட்களாக வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. 

Advertisment

அதோடு வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் வீட்டில் தீர்ந்துவிட்டதாலும், மின்சாரம் தடைப்பட்டதாலும் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர். அதன்படி அங்கிருந்தவர்களில் இரு குடும்பத்தினர், தாங்கள் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என அரசு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து செங்குன்றம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தீயணைப்புத்துறை  வீரர்கள் ரப்பர் படகு மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன்பின்னர் அங்கிருந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேரை ரப்பர் படகு மூலம் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.