தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக மதுரையில், சிம்மக்கல், ஆரப்பாளையம், தல்லாகுளத்தில் பொழிந்த கனமழையால் மதுரையில் பல இடங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. கனமழை காரணமாக பல மணி நேரம் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியதால் அந்த பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.
மதுரையில் பெய்த கனமழை காரணமாக ஒத்தக்கடை யானை மலையில் திடீர் அருவிகள் உருவாகியது. புதூர், சூர்யா நகர் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலை ஓரம் குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பழங்களில் பள்ளி வாகனங்கள் சிக்கித் தவித்தது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்தது
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 15,800 கன அடியில் இருந்து 11,717 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 119.73 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 15,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் நீர்வரத்து காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.