மேற்கு வங்க மாநிலத்தில் வடக்கில் இமயமலை பகுதிக்குட்பட்ட டார்ஜிலிங், கலிம்போங், கூச்பெஹார், ஜல்பைகுரி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது. கோரத்தாண்டவம் ஆடும் இந்தப் பயங்கர மழையால் டார்ஜிலிங்கில் உள்ள அனைத்து சாலைகளும் வெள்ள நீரில் மூழ்கின. அதோடு, வடக்கில் இமயமலை பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அடுத்த 48 மணிநேரத்திற்கு மிகக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த சூழலில், கனமழை காரணமாக டார்ஜிலிங் சதர், மிரிக், சுகியா போகாரி, ஜோர்பங்க்லோ, புல்பஜார் ஆகிய இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தையும், சிக்கிமையும் இணைக்கும் சாலைகள் மற்றும் டார்ஜிலிங்-சிலிகுரியை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், இந்தப் பகுதிகளுக்கான இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
மேற்கு வங்கத்தையே உலுக்கிய இந்த கோர நிகழ்வில் இடிபாடுகளில் சிக்கி, இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மலைப்பகுதி மாவட்டங்களில் இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்து வரும் மழையால், அண்டை மாவட்டமான ஜல்பைகுரியின் மல்பஜாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உள்ளூர் காவல்துறையினர், மாவட்ட நிர்வாகம், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து முழு வீச்சில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில், ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், இடிபாடுகளில் சிக்கி மாயமானவர்களை மீட்பு குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதனிடையே, டார்ஜிலிங்கில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திருவருபதி முர்முவும் பிரதமர் மோடியும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். டார்ஜிலிங்கில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மிகவும் வேதனை அடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க கடமைப்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளனர்.