heavy rain in thenkasi kutralam Photograph: (thenkasi)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில் அடுத்த ஆறு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பில், தெற்கு கேரளா, குமரிக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுகிறது. தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. வரும் அக்டோபர் 21ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி தென்கிழக்கு வங்கக்கடலில் மண்டலமாக வலுப்பெறும் சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஐந்தாவது நாளாக இன்றும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக அருவியின் அருகில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த வேலிகள் சேதமடைந்தன. அதேபோல் பெண்கள் உடை மாற்றுவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஷெட் தகரங்கள் அடித்துச் சென்றது.