இமாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜோசிதி கிஷ்த்வார் பகுதியில் கடந்த 14ஆம் தேதி (14.08.2025) மதியம் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் மற்றும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இங்குள்ள கட்டிடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள டோடா என்ற இடத்தில் மேக வெடிப்பு மீண்டும் நிகழ்வு இன்று (26.08.2025) நிகழ்ந்துள்ளது. இந்த பகுதியில் மேக வெடிப்பு காரணமாக பெய்த பெருமழையின் காரணமாக அப்பகுதியில் பெரு வெள்ளம் ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
அதோடு பெரு வெள்ளம் ஏற்பட்டு சாலைகள், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் சகதியாக நீர் ஓடுகிறது. இந்த வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அதே சமயம் ஜம்முவில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்ததால் ரவி நதியில் உள்ள ரஞ்சித் சாகர் அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தாவி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜம்மு டிஐஜி சிவகுமார் சர்மா கூறுகையில், “கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகள் அருகில் செல்வதைத் தவிர்க்குமாறு அரசு நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நெடுஞ்சாலையில் போக்குவரத்து சுமுகமாக இயங்கி வருகின்றன. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இமாச்சலப் பிரதேசம் குலு என்ற இடத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அங்கு சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும் தேசிய நெடுஞ்சாலை எண் 3இல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் இடைவிடாத கனமழை பெய்ததன் காரணமாக பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துள்ளது. ஜம்முவின் காடிகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அந்தப் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், வீடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை இந்திய ராணுவ வீரர்கள் மீட்டு வருகின்றனர்.
இது குறித்து பாஜக எம்.எல்.ஏ. நரிந்தர் சிங் கூறுகையில், “கடந்த 48 மணி நேரமாக மழை பெய்து வருகிறது. இதனால் இங்கு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். ராணுவமும் இங்கு வந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மீட்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். மற்றொருபுறம் சக்கி ஆற்றில் ஏற்பட்ட மண் அரிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதோடு 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 4 ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜம்முவில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வெள்ளம் போன்ற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, ஜம்முவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் நாளை (ஆகஸ்ட் 27) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு முழுவதும் தொடர்ந்து கனமழையைத் பெய்து வருவதன் காரணமாக அக்னூரில் செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்குடன் ஓடும் பியாஸ் நதி குறித்து, குலு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கோகுல் சந்திரன் கூறுகையில், “மாவட்டத்தில், கிட்டத்தட்ட அனைத்து துணைப்பிரிவுகளிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மணாலி அதிகபட்ச சேதத்தை சந்தித்து வருகிறது. பியாஸ் நதியின் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளது. பழைய மணாலி பாலமும் சேதமடைந்துள்ளது. இதுவரை கிடைத்த தகவல்களின்படி, மிகப்பெரிய சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது, ஆனால் உயிர் சேதம் எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.