தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அதி தீவிர மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை அக்டோபர் 22ஆம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.