விபத்தில் சிக்கிய இளைஞர் (வயது 22) ஒருவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இளைஞர் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து இளைஞரின் குடும்பத்தினர், இதய தானத்திற்குச் சம்மதம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இளைஞர் இதயம் உடலில் இருந்து எடுக்கப்பட்டது. 

Advertisment

அதன் பின்பு காலை 9 மணிக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி வழியாக தஞ்சை நோக்கி இதயத்துடன் ஆம்புலன்ஸ் புறப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து தஞ்சாவூர் மாவட்ட எல்லையான புதுக்குடியில் இருந்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தனது ஜீப்பில் சைரன் ஒலித்தவாறு வழிநடத்திச் சென்று தஞ்சாவூரில் உள்ள கணபதி நகரில் உள்ள தனியார் இதய மருத்துவமனைக்கு சுமார் இரண்டு மணி நேரத்தில் இதயம் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டது.

Advertisment

இதனைத்தொடர்ந்து, இதய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டது. விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் தானமாகப் பெறப்பட்டு மதுரையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் தஞ்சாவூருக்கு 2 மணி நேரத்தில் அதிவேகமாகக் கொண்டு வரப்பட்டது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.