சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கான மாற்று உறுப்புகளான இதயம் மற்றும் நுரையீரல் மதுரையில் இருந்தது. இதையடுத்து, நேற்று (27-02-26) இந்த உறுப்புகள் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலமாகச் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அந்த உறுப்புகள் அடங்கிய பெட்டியை, மெட்ரோ ரயில் மூலமாகப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

Advertisment

அதன்படி, அந்த உறுப்புகள் அடங்கிய பெட்டியை மருத்துவர்கள் அடங்கிய குழு, பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல மெட்ரோ ரயில் நிர்வாக உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காகவே, அந்த ரயில் மீனம்பாக்கத்தில் இருந்து அடுத்தடுத்துள்ள எந்த ரயில் நிலையங்களிலும் நிற்காமல் ஒன்பது நிமிடத்தில் ஏழு ரயில் நிலையங்களைக் கடந்து இறுதியாக ஏஜி-டிஎம்எஸ் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்பு, அந்த உறுப்புகள் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர், அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Advertisment

7 தடங்களை 9 நிமிடத்தில் கடந்து அறுவை சிகிச்சைக்கான உறுப்புகள் விரைவில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது பெரும் பாராட்டுதலுக்குரிய நெகிழ்ச்சியான சம்பவமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு, ஒத்துழைப்பு வழங்கிய மெட்ரோ ரயில் அலுவலர்கள் மற்றும் நிலைய பணியாளர்களின் முழு ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்புடன், அந்தக் மருத்துவ குழுவினர் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மெட்ரோ ரயிலில் இந்த சாதனையான நிகழ்வு நடந்துள்ளது. மேலும், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, சமீபத்தில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில்வே திருத்த விதிகள் 2023-ன் கீழ் இந்த சேவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.