Hearing on 9 petitions today on Karur stampede incident
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையே அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதைக் கண்டுகொள்ளாமல் இருத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், தனியார் சொத்துக்கள் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக என்.ஆனந்த், சி.டி.நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனு மற்றும் 7 பொதுநல மனுக்கள் உள்ளிட்டவைகளின் மீதான விசாரணை இன்று (03-10-25) உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வரவுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், கதிரேசன், தங்கம் உள்ளிட்ட ஏழு பேர், அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு புதிய விதிகளை வகுக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிமணி ஆகியோர் அமர்வு முன்பு வரவுள்ளது. பொதுநல வழக்குகள் மீதான விசாரணை முடிந்த பின், நீதிபதி ஜோதிமணி, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தனியாக விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்.