தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்கள் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் கடந்த 2 வாரக் காலமாக வைரஸ் காய்ச்சலின் பரவல் சற்று அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாகத் தமிழ்நாடு முழுவதும் பரிசோதனைகளைத் தமிழ்நாடு சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தான் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வோர் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்புக்காக முகக்கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுரையை வழங்கியுள்ளது.
அதே சமயம் வைரஸ் காய்ச்சலினுடைய தன்மையைக் கண்டறியச் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகளோடு சிகிச்சை பெற வரும் நோயாளியின் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பவும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் ஆய்வகங்களுக்கு பொதுச் சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதித்த பிறகு புதிய வகை வைரஸ் கிருமியா?, ஏற்கனவே உள்ள வைரஸா என்பதைக் கண்டறிந்து அதனைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானவர்கள் உள்ளிட்டவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களுக்குச் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். எனவே மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரதுறை தெரிவித்திருந்தது.
தமிழ்நாட்டில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவி வருவது சாதாரண இன்ஃபுளூவன்சா காய்ச்சல் மட்டுமே என்றும், இது புதிய வகை வைரஸ் தொற்று அல்ல என்றும் பொது சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50% நோயாளிகளுக்கு இன்ஃபுளூவன்சா A வகை பாதிப்பு மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.