மத்தியப் பிரதேசம் மாநிலம் கார்கோன் பகுதியில் உள்ள ஷிவ்னா கிராமத்தில் அரசு சுகாதார மையம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் பிரசவ வலி ஏற்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக சுகாதார மையத்திற்கு அழைத்து வரப்பட்டார். வலி பொறுக்க முடியாமல் கதறிய கர்ப்பிணிப் பெண்ணிற்குப் பிரசவம் பார்க்க, சுகாதார மையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் யாரும் இல்லாததால் அப்பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். வலியால் அவதிப்படும் கர்ப்பிணிப் பெண்ணிற்கு மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் யாரும் இல்லாததால் கடுங்கோபம் கொண்ட உறவினர்கள், சுகாதார மையத்தின் கதவைப் பூட்டினர்.
அதே சமயம் வலியால் கதறிய கர்ப்பிணியை வேறு மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல அவசர ஊர்தியும் கிடைக்கவில்லை. அதனால், பெரும் வலியோடு, கடினமான முறையில் அந்த பெண் குழந்தையைப் பிரசவித்தார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாதக் காரணத்தினால் சுகாதார மையத்தின் வாசலிலேயே பெண் குழந்தையைப் பிரசவித்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் துன்பத்தை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து உறவினர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது புகார் அளித்தனர். மேலும், சுகாதார மையத்தின் வாசலில், தரையில் பிரசவம் நடந்துள்ளதால் அப்பெண் மற்றும் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்பட்ட வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
அதோடு, தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருபவர்களுக்குச் சுகாதாரப் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக உள்ளது? எனவும் கேள்வி எழுப்பினர். இது குறித்துப் பேசிய தலைமை மருத்துவர் மற்றும் சுகாதார அதிகாரி டி.எஸ். சவுகான் கூறுகையில், "அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரை தாமதமாக அழைத்து வந்தனர். அவர்கள் சற்று முன்னதாக வந்திருந்தால், சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். மேலும், அவரை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றிருக்கலாம். சுகாதார மையத்தில் மருத்துவம் பார்க்க ஆள் இல்லை. ஒரு ஊழியர் ஏற்கனவே விடுப்பில் இருந்தார், மற்றொருவர் திடீரென அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டார். அதனால் தன மருத்துவம் பார்க்க யாரும் இல்லை" என்று தெரிவித்தார்.
இருப்பினும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த இரு மருத்துவ ஊழியர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களின் 15 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் சம்பந்தப்பட்ட துரையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/27/baby-file-2026-02-27-14-24-18.jpg)