திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி வளாகத்தில் அரங்கக் கட்டிடம் கட்டுவது தொடர்பாக ஊரைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. ஒரு தரப்பு அரங்கம் கட்ட வேண்டும் என்றும், மற்றொரு தரப்பு கட்டக்கூடாது என்றும் வாதிட்டு வந்தனர். இதனால் ஏற்பட்ட பிரச்சனையின் விளைவாக, கடந்த ஆகஸ்ட் 2, 2025 அன்று (சனிக்கிழமை) தொழிலாளர்கள் வேலை செய்ய வந்தபோது, அரங்கம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மேஸ்திரியைத் தாக்கியுள்ளனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், அன்று பள்ளிக்கு யாரும் செல்லவில்லை.

இந்நிலையில், ஆகஸ்ட் 4, 2025 திங்கட்கிழமையன்று, பள்ளியில் மீண்டும் பிரச்சனை உருவாகியது. இரு தரப்பினரும் பள்ளிக்குள் நுழைந்து, தலைமை ஆசிரியர் சரஸ்வதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கடும் சத்தத்துடன் சண்டையிட்டனர். இதனைக் கேள்விப்பட்டு, ஆம்பூர் தாலுகாவைச் சேர்ந்த மூன்று செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க பள்ளிக்கு வந்தனர். இரு தரப்பினரும் தலைமை ஆசிரியருடன் சண்டையிடுவதை செய்தியாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோவாகப் பதிவு செய்தனர். இதனைக் கண்ட தலைமை ஆசிரியர், “உங்களை யார் உள்ளே விட்டது?” என்று கேட்டு, செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

103

செய்தியாளர்கள், “150 பேர் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து பிரச்சனை செய்வதாகக் கேள்விப்பட்டு, செய்தி சேகரிக்க வந்தோம்” என்று விளக்கமளித்தனர். ஆனால், இதனைக் காதில் வாங்காமல், தலைமை ஆசிரியர், “அவர்களை அடித்து வெளியே தள்ளுங்கள்” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக இருந்த சிலர் மற்றும் கஞ்சா போதையில் இருந்த சில ரவுடிகள், கூலிப்படையாக மாறி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அவர்களின் செல்போன்களைப் பறிக்க முயன்றனர் மற்றும் அவர்களின் ஆடைகளைக் கிழித்தனர். இந்தத் தாக்குதலில் இருந்து தப்பிய செய்தியாளர்கள், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும், தலைமை ஆசிரியர் சரஸ்வதி மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உமராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

செய்தியாளர்கள் மீதான இந்தத் தாக்குதலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்ட பத்திரிகையாளர் சங்கங்கள் கடுமையாகக் கண்டித்துள்ளன. தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், தாக்குதலுக்கு உத்தரவிட்ட தலைமை ஆசிரியர் சரஸ்வதி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும், மேலும் அவரை உடனடியாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.