கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூந்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டாய ஓய்வு பெற்று குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு ஆறு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், 27-ஆம் தேதி மதியம் சொந்த வேலை காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை வந்த ராமதாஸ், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பிச் சென்றார். உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பெயர்ச்சி நிலையம் எதிரே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று ராமதாஸின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் ராமதாஸ் தூக்கி வீசப்பட்டு, அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Advertisment

இதைத் தொடர்ந்து உடல்நிலை மோசமானதால், அவரது உறவினர்கள் பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ராமதாஸ், உயிரிழந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு ராமதாஸின் உறவினர்களுக்கும் இறந்த செய்தி சொல்லப்பட்டது. அதன் காரணமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள், ராமதாஸின் வீட்டின் முன்பாக பந்தல் அமைத்தல், கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அடித்து ஒட்டுவது போன்ற அனைத்து காரியங்களையும் மேற்கொண்டனர். மேலும், இந்தச் செய்தியறிந்த உறவினர்கள் கையில் மாலையுடன் ராமதாஸ் வீட்டிற்கு வந்தனர்.

இந்த நிலையில் ராமதாஸின் உடல் கூந்தலூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்ஸில் இருந்து இறக்கும் போது ராமதாஸின் உடலில் மூச்சுக்காற்று வெளியாயுள்ளது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராமதாஸின் மகள் மருத்துவர் என்பதால், உடனே அவர் தனது தந்தையின் உடலைப் பரிசோதித்தார். அதில் ராமதாஸ் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

Advertisment

இதையடுத்து ராமதாஸ் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

தலைமையாசிரியர் இறந்தவிட்டதாக கூறி இறுதி சடக்கிற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில், திடீரென அவர் உயிருடன் இருந்தது அந்த பகுதியினர் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.