/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3456.jpg)
ஆப்பிரிக்கா தந்த மேதைகளில் ஒருவரும், பன்னாட்டு அறிஞருமான யூசுப் அல்-கர்ளாவி (96) அவர்கள் இன்று மரணமடைந்தார். அவரது இழப்பு ஆழ்ந்த துயரத்தை தருகிறது என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது; “ஆப்பிரிக்கா தந்த மேதைகளில் ஒருவரும், பன்னாட்டு அறிஞருமான யூசுப் அல்-கர்ளாவி (96) அவர்கள் இன்று மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த துயரத்தை தருகிறது. முரண்பாடுகளில் உடன்பாடு என்ற கொள்கையுடன் கருத்து இணக்கத்தை வலியுறுத்தி அவர் எழுதிய நூல்களும், ஆற்றிய உரைகளும் காலம் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாக்கம் உடையவை.
காலத்தின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அவர் வழங்கிய மார்க்க வழிகாட்டல்களும், இறைத்தூதரின் போதனைகளின் ஊடாக அவர் சுட்டிக்காட்டிய விஷயங்களும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளையும் கடந்து மேலை நாட்டார்களையும் கவர்ந்தது. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சிந்தனையாளர்களும், அவர் எடுத்துரைத்த கருத்துக்களை வழி மொழிந்தனர். சமகால சிக்கல்களை எளிதாக அணுகி, பாறைகளை போல தோற்றமளித்த விவகாரங்களில், பனித்துளிகளை போல தீர்வுகளை தந்தவர் என்ற அடிப்படையில் அவரது இழப்பு ஆன்மிக உலகிற்கு பேரிழப்பாகும்.
நேர நிர்வாகம், நாம் பிரித்து விட வேண்டாம், முஸ்லிம்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்.?, திருக்குர்ஆன் கூறும் பொறுமை, இளைஞர்களே... நாங்கள் உங்களிடம் எதை எதிர்பார்க்கிறோம்.? முரண்பாடுகளில் உடன்பாடு, இஸ்லாம் நடுநிலை மார்க்கம், உள்ளிட்ட இவரது 120 நூல்களின் அணிவகுப்புகள் பிரமிப்புகளை தருபவை.
மாணவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய, எது முதலில்.? என்ற நூல் மிகப்பெரிய அறிவுக்கொடையாகும். 'சமூக பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜகாத்தின் பங்கு' என்ற இவரின் ஆய்வு கட்டுரை வறுமை ஒழிப்பை பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது. ஃபத்வாக்கள் மற்றும் ஆராயச்சிக்கான ஐரோப்பிய மையத்தை இயக்கியதும், அல்ஜெரியா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளில் அறிவொளி பணிகளை நிறுவனமயப்படுத்தியதும், மார்க்க விவகாரங்களில் சீர்திருத்த அணுகுமுறைகளை மேற்கொண்டதும் இவரது ஆளுமைகளை பறைசாற்றியது.
பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காகவும், சுதந்திர வாழ்வுக்காவும் அவரது இதயம் துடித்த கொண்டே இருந்தது. உலகெங்கும் பரவிய தீவிரவாதத்தையும், தீவிரவாத குழுக்களையும் கடுமையாக எதிர்த்த இவரது துணிச்சலும் பாராட்டத்தக்கது. Other Side of news என்று உலகை உலுக்கி வரும் அல்ஜெஸீரா பன்னாட்டு ஊடகத்தை உருவாக்கியதில் இவரது பங்களிப்பு அளப்பரியதாகும். இது குரலற்ற மக்களின் குரலை ஒளிபரப்புகிறது. இதன் உருவாக்கத்தில் ஆணிவேராக திகழ்ந்த யூசுப் அல் கர்ளாவியை ஆசிய, ஆப்பிரிக்க மக்கள் நன்றியுடன் நினைவு கூறுவார்கள் என்பதில் ஐயமில்லை.
தான் பிறந்த எகிப்து நாட்டில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திட அவர் ஆற்றிய பணிகள் அவரை நாடு துறக்க செய்தது. பிறந்த மண்ணிலிருந்து அகதியாய் செல்ல வழிவகுத்தது. அவர் தொடர்ந்து கத்தாரில் முகாமிட்டு உலகெங்கும் அறிவொளியை சமரசமின்றி, இடையுறாது பரப்பி வந்தார். அவரது காணொளிகளை வலை தளங்களில் லட்சக்கணக்காணோர் தினமும் கண்டு பயனடைகிறார்கள். மாணவர்களாக மாறி மகிழ்கிறார்கள். இன்று அவர் நம்மிடமிருந்து விடைபெற்றிருக்கிறார்.
ஆப்பிரிக்க வானின் நட்சத்திரம் விழுந்து விட்டது. வளைகுடாவில் ஒளி வீசிய முத்து மீண்டும் சிப்பிக்குள் சென்று விட்டது. ஓரிறை உலகம் ஒப்பற்ற மேதையை இழந்திருக்கிறது. பக்குவமும், முதிர்ச்சியும், இணக்கமான சிந்தனைகளும் நிறைந்த ஒருவரை இழந்த வருத்தம் வாட்டுகிறது. இறைவன் அவரது பிழைகளை மன்னித்து, அவரது மறு உலக வாழ்வு சிறப்புற பிரார்த்திக்கிறோம். ஆறுதலை பகிர்ந்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)