ADVERTISEMENT

பாக்யராஜ் மீண்டும் ராஜினாமா கடிதம் அனுப்பியது ஏன்? சங்கத்தினர் அதிர்ச்சி!

06:36 PM Nov 04, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய இருப்பதாக பாக்யராஜ் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். ஏற்கனவே அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தை சங்கத்தினர் ஏற்காத நிலையில், மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பதால் சங்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

செங்கோல் என்ற தனது படத்துக்காகத் பதிவு செய்திருந்த கதையைத் தான் சர்கார் -ஆக இயக்குநர் முருகதாஸ் படமாக்கியுள்ளதாக எழுத்தாளர் சங்கத்தில் திரைப்பட உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரை ஆய்வுசெய்த எழுத்தாளர் சங்கத் தலைவர் இயக்குநர் கே.பாக்யராஜ், சர்கார், செங்கோல் கதைகளை ஆய்வுசெய்து, இரு கதைகளின் மையக்கருவும் ஒன்றுதான் எனக்கூறினார். இதையடுத்து நடைப்பெற்ற சங்கத்தின் பேச்சுவார்த்தையில் முருகதாஸ் உடன்படாததால் சென்னை ஐகோர்ட்டில் வருண் ராஜேந்திரன் வழக்கு தொடந்தார்.

வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக நின்றதால் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பாக்யராஜ் மீது குற்றம் சுமத்தினார். அவர் குறித்து அவதூறுபரப்பினார். முருகதாசுக்கு ஆதரவாகவும் சில இயக்குநர்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பட ரிலீசுக்கு குறுகிய காலமே இருப்பதால் இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டது. இரு படத்தின் கருவும் ஒன்றுதான் என்று முருகதாஸ் ஒப்புக்கொண்டதோடு, வருண் ராஜேந்திரன் பெயரை டைட்டில் கார்டில் போட்டுவிடுவதாகவும் தெரிவித்தார். சமரசம் ஏற்பட்டதால் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதன் பின்னர் பாக்யராஜை சுற்றி சர்ச்சை எழுந்தது. சர்கார் - செங்கோல் விவகாரத்தில் சர்க்கார் படத்தின் கதையை முழுமையாக வெளியே சொல்லிவிட்டதாகவும், அதனால் அவர் மீது சன் பிக்சர்ஸ் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் பேச்சு எழுந்தது. சங்கத்தில் உள்ள முருகதாஸ் ஆதரவாளர்கள் அனைவரும் கூடி பாக்யராஜை தலைவர் பதவியில் இருந்து தூக்குவது என்று முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தனக்கு தேவையில்லாத அசவுகரியங்கள் ஏற்பட்டதால் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, தனது கடிதத்தை சங்கத்துக்கு அனுப்பி வைத்தார் பாக்யராஜ். பெரிய இயக்குநர் என்று பார்த்து முருகதாஸ் பக்கம் செல்லாமல், நியாயத்தை பார்த்து உதவி இயக்குநர் பக்கம் நின்றதால் பாக்யராஜ் ராஜினாமா என்றதும் உதவி இயக்குநர்களூம், திரையுலகமும் கொந்தளித்தது. அதனால் பாக்யராஜின் ராஜினாமா கடிதத்தை நிர்வாகிகள் ஏற்கவில்லை. ‘ராஜினாமா கடிதத்தை அனைத்து உறுப்பினர்களிடம் தெரிவித்தோம். அனைவரும் ஒருமனதாக ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டனர். நிர்வாகிகள் முதல் செயற்குழு உறுப்பினர்கள் வரை நீங்களே தலைவராகத் தொடர வேண்டும் என விரும்புகின்றனர். அவர்களது முடிவையே தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம்’ என பாக்யராஜிடம் கூறிவிட்டனர்.

இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. மீண்டும் அவருக்கு ஏற்பட்ட தேவையில்லாத அசவுகரியங்கள் என்னவோ? மீண்டும் தான் ராஜினாமா செய்வதாக கூறி, மற்றொரு கடிதத்தை சங்கத்துக்கு அனுப்பியுள்ளார் பாக்யராஜ். இது சங்கத்தினரை மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT