White paper will be published on the progress achieved by the country Nirmala Sitharaman

Advertisment

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (31-01-2024) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (01-02-2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து 58 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.

அதில், “திருத்தப்பட்ட வரி வருவாய் மதிப்பீடு 27.56 லட்சம் கோடி ரூபாய் ஆகும். நிதி பற்றாக்குறை 5.8% ஆகும். வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. நேர்முக வரி மற்றும் மறைமுக வரி என எந்த வரி விதிப்பு விகிதத்திலும் மாற்றம் இல்லை. வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கெனவே இருந்த நடைமுறையே தொடரும். சமூகநீதி என்பது அரசியல் வாக்கியமாக இருக்கிறது. அதனை நாங்கள் திட்டங்களுக்கான மந்திரமாக பயன்படுத்துகிறோம்.

கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும். மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ. 1.2 லட்சம் கோடி வழங்கப்படும். மாலத்தீவு விவகாரத்தை தொடர்ந்து லட்சத்தீவில் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும். 40 ஆயிரம் சாதாரண ரயில் பெட்டிகள் ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகள் தரத்தில் புதுப்பிக்கப்படும். வேகமாக உயர்ந்து வரும் மக்கள் தொகையால் ஏற்படும் சவால்களைக் கண்டறிய உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படும்.

Advertisment

வீட்டின் மேற்கூரையில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம். கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க 9 வயது முதல் 18 வயதுள்ள பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் அனைத்தையும் அறிவிக்க முடியாது. அடுத்த அரசு ஆட்சிக்கு வரும் வரை நாட்டை நடத்த இந்த இடைக்கால பட்ஜெட் உதவும்” எனத் தெரிவித்தார்.