Advertisment

‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிலைப்பாடு என்ன?’- த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு

T.V.K. leader Vijay's announcement What is the stand on the Vikravandi by-election?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

Advertisment

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே. எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். கழகத் தலைவர், விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Vikravandi tvk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe