Thiruvarur People suffering from rainwater surrounding houses

Advertisment

டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து நான்கு நாட்களாக கொட்டித்தீர்த்துவரும் கனமழையால் குடிசைகளையும், வீதிகளையும் முழ்கடித்திருக்கிறது நீர். அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ எட்டிக்கூட பார்க்கவில்லை என்கிற சோககுரலே பல இடங்களிலும் கேட்கிறது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட 3வது வார்டு தெப்பக்குளம் வடகரையில் உள்ள காட்டுநாயக்கண் தெருவில் துப்புரவு பணியாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர்.

Advertisment

தெப்பக்குளத்திற்கும் பாமணியாற்றுக்கும் இடையே தாழ்வான பகுதியில் இந்த தெரு அமைந்திருப்பதால் மழைக்காலங்களில் குடிசைகளை மழைநீர் சூழ்ந்துவிடுவது வழக்கமாகவே இருந்திருக்கிறது. அந்த மழைநீர் அருகில் ஓடும் பாமணியாற்றில் வடிவதற்கு வடிகால் வசதி இருந்தும் ஆக்கிரமிப்புகளாலும், வாய்க்கால் தூர்வாராமல் அடைத்துக்கிடப்பதாலும் தண்ணீர் வடிய வழியில்லாமல் குடிசைகளுக்குள் மழைநீர் புகுந்துவருகிறது.

Thiruvarur People suffering from rainwater surrounding houses

இந்தநிலையில், கடந்த நான்கு நாட்களாக கொட்டித்தீர்த்துவரும் கனமழையால் அந்தத் தெருவே வெள்ளக்காடாக மாறி மின்சாரமின்றியும், உணவு இல்லாமலும், மாற்று உடையில்லாமலும், உறங்க இடமின்றியும், உட்காரக்கூட இடமில்லாமல் வீடுகளையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வேதனையில் தவித்துவருகின்றனர். அந்த மழைநீரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வடியவைக்க முயற்சி எடுத்தும் தண்ணீர் பாமணியாற்றில் வடிய வழியின்றி தேங்கிக்கிடக்கிறது. நகராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல்கிடைத்து, அவர்கள் அங்குவந்து தண்ணீரை வடிய வைக்க முயற்சித்தும் பலனில்லை.

"வருஷா வருஷம் மழை வரும்போதெல்லாம் இப்படி மழை தண்ணீர் எங்களை சூழ்ந்திடுது. இரவில் மழை அதிகமாக, விடாமல் பெய்வதால பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் வீட்டிற்குள் புகுந்துடுது. குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகுந்த சிரமப்படுறோம், அமைச்சர் காமராஜ் இருக்கும் ஊரில்தான் நாங்களும் இருக்கோம், அவங்க தெரு, வீட்டு குப்பைகளையும் நாங்கதான் அள்ளி சுத்தம் செய்யுறோம். ஆனா நாங்க எப்படி இருக்கிறோம், எங்க நிலைமை என்னா என்பதைகூட நினைக்க மறுப்பது வேதனையா இருக்கு" என்கிறார்கள் வேதனையுடன்.