Skip to main content

திருவாரூர் இடைத்தேர்தல்- தி.மு.க வேட்பாளராக மு.க.ஸ்டாலினுக்குப் பெருகும் ஆதரவு!

Published on 01/01/2019 | Edited on 01/01/2019
st

   

  கலைஞரின் மரணத்தால் ஜனவரி 28ந் தேதி இடைத்தேர்தலை சந்திக்கும் திருவாரூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்க வேண்டும் என்ற வலியுறுத்தல் அதிகமாக உள்ளது.

 

      கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர். திருவாரூர்வாசிகளிடம் மண்ணின் மைந்தரான கலைஞருக்குத் தனி மதிப்பு இருப்பதால், அவர் உடல் நலன் குன்றியிருந்தபோதே அடிக்கடி திருவாரூர் தொகுதிக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார்.

 

      அடுத்த பொதுத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில்தான் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடம் இருந்தது. இந்நிலையல், இடைத்தேர்தலில் கலைஞரின் தொகுதியில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் போட்டியிட்டால் பொதுமக்களின் அமோக ஆதரவு கிடைக்கும் என கள நிலவரம் குறித்த அறிக்கைகள் தி.மு.க. தலைமைக்குக் கிடைத்த நிலையில், குடும்பத்திலிருந்து புதிதாக யாரையும் தேர்தல் களத்தில் நிறுத்துவதைவிட, பொதுத்தேர்தலில் திருவாரூரில் போட்டியிடவுள்ள மு.க.ஸ்டாலினே போட்டியிட்டால் அது கட்சிக்குப் பெரும் பலத்தைத் தரும்-வெற்றியை உறுதி செய்யும் என்பதால் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகியுள்ளது.

 

      தி.மு.க.வும் அதன் கூட்டணியும்  அதிக முறை வெற்றி பெற்றுள்ள திருவாரூர் தொகுதியில் இதுவரை அ.தி.மு.க. ஒரு முறைகூட வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.     

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி: ஒரு வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுது!

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

 

tamilnadu assembly by election vikravandi one booth station poll stop



தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, பலத்தப் பாதுகாப்புடன் இன்று (21/10/2019) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒரு வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுது காரணமாக, சுமார் ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம். 235- வது எண் கொண்ட வாக்குச்சாவடியில் பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்க அலுவலர்கள் தீவிர முயற்சி செய்து செய்து வருகின்றன. 



 

Next Story

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்; அரசியல் கட்சிகள் கருத்துக்கேட்பில் தேர்தல் அதிகாரியிடம் முறையீடு

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
e

 

 கஜாபுயல் காரணமாக திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் பதிவுசெய்துள்ளனர்.

 

திருவாரூர் தொகுதியில் வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆனையத்தால் அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனு தாக்கல்களும் தொடங்கி நடந்துவருகிறது. அதோடு திமுக, அமமுக, நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் திருவாரூர் தொகுதிக்கான  வேட்பாளரை அறிவித்து இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். அதிமுகவில் வேட்பாளர் தேர்வு நடந்துவருகிறது.

 

இந்தநிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து,  " கஜா புயல் பாதிப்பின் காரணமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்திவைக்க வேண்டும்" என்கிற கோரிக்கை பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி விளக்கம் கேட்டு வழக்கை 7 -ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். 

 

இந்த சூழலில் திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது.  மக்களின் மனநிலை என்ன? அரசியல் கட்சிகளின் நிலைபாடு என்ன என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். 

 

இதையடுத்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமையில் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

 

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை இப்போது நடத்தவேண்டாம் என வலியுறுத்தினர். கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிந்தபிறகு தேர்தலை நடத்தவேண்டும் என்றும்  நாடாளு மன்றத்தேர்தலோடு சேர்த்து நடத்தலாம் என்றனர்.  அமமுக உள்ளிட்ட சில கட்சிகள் தேர்தலை நடத்தவேண்டும் என வலியுறுத்தின.

 

அனைத்துதரப்பு கருத்துக்களையும் கேட்டுக்கொண்ட ஆட்சியர், அரசியல் கட்சிகளின் கருத்துக்களை அறிக்கையாக தயாரித்து இன்று மாலை தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்புவதாக  கூறியுள்ளார். அதன் பிறகு தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தலை திட்டமிட்டபடி நடத்தலாமா, வேண்டாமா என்பதை  திங்கள் கிழமை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.