ADVERTISEMENT

"ஹலால் இஸ்லாமியர்களின் உணவுமுறை என சுருக்கிப் பார்க்கக்கூடாது" - தொல்.திருமாவளவன்

06:00 PM May 30, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

"ரஷ்யா-இஸ்லாமிய உலகம்: கசான் உச்சி மாநாடு" என்பது ரஷ்யக் கூட்டமைப்பு நாடுகளுக்கும் இஸ்லாமிய உலக நாடுகளுக்கும் (OIC) இடையிலான பொருளாதார ஒத்துழைப்பிற்கான முக்கிய கூட்டுத் தளமாகும். இதன் முதல் பொருளாதார உச்சி மாநாடு 2009 ல் நடைபெற்றது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் துருக்கி அதிபர் ரசிப் தைய்யிப் எர்டோகன் இருவரும் அந்த மாநாட்டை துவக்கி வைத்தனர். இரண்டு ஆண்டுகாலம் கரோனா பெரும்தொற்றினால் இந்த உச்சி மாநாடு நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், டாடர்ஸ்தான் குடியரசின் தலைவர் ருஸ்தம் மின்னிகானோவ் ஆகியோரின் தலைமையில் "ரஷ்யா - இஸ்லாமிய உலகம்: கசான் 13வது உச்சி மாநாடு" மே மாதம் 19ம் தேதியிலிருந்து 21ம் தேதி வரை கசானில் நடைபெற்றது. ரஷ்யாவின் வோல்கா பல்கேரிய (VOLGA BULGARIANS) தேசிய இன மக்கள் இஸ்லாத்தைத் தழுவிய வருடாந்திர கொண்டாட்டங்களும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக "உலக ஹலால் தினம் "கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்த உச்சி மாநாட்டின் நோக்கம் ரஷ்யா மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், பொருளாதாரம், நிதி மேலாண்மை, மருத்துவம், விவசாயம், அறிவியல் ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை மேம்படுத்தும் திட்டங்களைக் கொண்டிருந்தது. மூன்று நாள் நிகழ்வில் 147 ஹலால் கண்காட்சிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. UAE, துருக்கி, தென் ஆப்ரிக்கா, எகிப்து, இந்தோனேசியா, மலேசியா, ஜோர்டான், ரஷ்யா, கஜகஸ்தான், சிங்கப்பூர், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், சூடான், ஈராக், நெதர்லேண்ட், மொரோக்கோ, ஸ்பெயின் உள்ளிட்ட 64 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கு பெற்றனர்.

இந்த உச்சி மாநாட்டில் உலக ஹலால் கருத்தரங்கில் உரையாற்றிடுவதற்கு இந்தியாவிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவருடன் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் செயலாளர் அப்துர் ரஹ்மான் மற்றும் உலக ஹலால் பேரவையின் தலைவர் முகம்மத் ஜின்னா ஆகியோரும் கலந்து கொண்டார்கள். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த சர்வதேச உச்சி மாநாட்டில், கருத்தரங்கம், கண்காட்சிகள் எனப் பல நிகழ்வுகளில் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றிடும் போது, ஹலால் என்பதை அறம் என்ற பொருளில் "அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றினார். "ஹலால் என்பது இஸ்லாமியர்கள் பின்பற்றும் உணவு முறை என்றோ அல்லது விலங்குகளை அறுப்பது என்றோ சுருக்கிப் பார்த்திடக் கூடாது. இறைச்சிக்கான "ஹலால்" என்பது உலக வணிக சந்தையில் உயர்தரமான தயாரிப்புகளையும், தரமான சேவைகளையும் உள்ளடக்கிய முறைப்படுத்தப்பட்ட சர்வதேச வணிக கொள்கையாகும். ஹலால் வணிகம் கவனிக்கத்தக்க வகையில் உலகளாவிய சந்தையில் வளர்ந்து வருகிறது. உலகளாவிய ஹலால் சந்தையின் மதிப்பு 6.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்படுகிறது.

சர்வதேச அளவில் நுகர்வு கலாச்சார விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதைச் சார்ந்த நுகர்வு தேவைகளும் அதிகரித்து வருகிறது. சந்தையின் நுகர்வு தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக ஹலால் வணிகம் வளர்ந்து வருகிறது. ஹலால் வணிகத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பல முக்கியமான சாதனைகளையும் நிகழ்வுகளையும் கவனிக்கும் போது இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உலகளாவிய அளவில் ஹலால் வணிகத்திற்கு மிகப் பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஹலால் என்ற நெறிப்படுத்தப்பட்ட வாழ்வியல் முறை, மக்களுக்கும், சுற்றுப்புறச்சூழலுக்கும் சமூகத்திற்கும் பல்வேறு தொழில் துறைகளுக்கும் மிகச் சிறந்த செழிப்பான வளர்ச்சியைத் தருகிறது

ஹலால் துறையின் தொடர் வளர்ச்சிகள், கலாச்சார மரபு மீறாத அதன் உயர்ந்த தரம், மனித சமூகத்தின் மேன்மைக்கான அதன் உலகளாவிய பண்பு, அனைத்து மக்களையும் உள்வாங்கிக் கொள்ளும் அதன் தனித்தன்மையால் ஹலால் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வணிக முறையாக உள்ளது. ஆகவே வரும் காலங்களில் அழகுசாதனத் துறை முதல், நிதி மேலாண்மைத் துறை வரை எல்லா துறைகளிலும் ஹலால் மிகச் சிறந்த வளர்ச்சியை எட்டும் என உறுதியாக நம்புகிறேன். ஹலால் சந்தையில் பிரமிக்க வைக்கும் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கிறது. அதே நேரத்தில், காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப சர்வதேச அணுகுமுறைகளிலும், நவீன தொழில் நுட்பத்திலும் நாம் போட்டிப் போட்டுக் கொண்டு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

"ஹவால்" இஸ்லாமியர்களுக்கு மட்டுமான வணிக சந்தை என்ற தோற்றம் உள்ளது, அதன் தோற்றத்தை மாற்றி, ஹலால் உற்பத்தியையும் அதைப் பற்றிய விழிப்புணர்வையும், அதன் சேவைகளையும், அதன் வணிக அடையாளத்தையும் முஸ்லிம் அல்லாத அனைத்து தரப்பு மக்களிடத்திலும் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஹலால் தொழில் துறையினருக்கு இருக்கிறது. இன்று முஸ்லிம் அல்லாதவர்கள் பலர் ஹலால் தயாரிப்புகளை தங்கள் வணிகம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காகத் தேர்ந்தெடுக்கின்றனர். அதே வேளையில், சில நாடுகளில் ஹலால் ஃபோபியா என்று அதற்கு எதிரான அரசியல் செய்யும் நிலையும் சமீபகாலத்தில் அதிகரித்து வருவதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இனி ஹலாலை ஒரு பாரம்பரிய, தத்துவ மற்றும் பழமை மாறாத சித்தாந்தமாகப் பார்க்கக் கூடாது.

ஹலால் என்பது சமரசம் செய்ய முடியாத இஸ்லாமியக் கொள்கைகளின் தொகுப்பாக இருந்தாலும், அதன் தயாரிப்புகளில் புதுமையின் கூறுகளும்,தனித்துவமான படைப்பாற்றல் திறனையும் ஹலால் தொழில்துறையினர் உள்வாங்கிக் கொண்டு மேம்படுத்திடப் பாடுபட வேண்டும். நவீனவாதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகத் தயாரிப்புகளையும், சேவைகளையும் தனித்துவமாக வடிவமைக்கப்பட வேண்டும்..

SUNWHD & WHD ன் மிகச் சிறந்த நிபுணத்துவம் மற்றும் ஒன்றிணைந்த கூட்டுறவு முயற்சியினால் இந்தியாவிற்கும் டாடர்ஸ்தான் நாட்டிற்கும் இடையே பலவித தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் வணிக தளங்களை உருவாக்கிட முடியும் என்று நம்புகிறேன். புதிய வணிகத் தளங்களின் மூலமாக இரு நாடுகளும் பலனடையும் வகையில் மிகச் சிறந்த ஏற்றுமதி, இறக்குமதி வணிக சந்தைகள் உருவாகும்" என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT