
வடக்கே காசி என்றால் தெற்கே இராமேஸ்வரம். இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றானதும், சக்தி பீடங்களில் ஒன்றானது ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில். புராணக் காலத்தோடு தொடர்புடைய இந்த கோவிலுக்கு நேர்த்திக்கடனாக தங்களுக்கு கிடைத்த அரிய, தொன்மை மிக்க பொருட்களை சுவாமிக்கு வழங்கி கௌரவித்தது மன்னர்கள். ஜமீன்தார்கள் உட்பட பல ஆயிரம் பக்தகோடிகள் இக்கோவிலுக்கு சொந்தமான நகைகளும், சிலைகளும் என்னென்ன..? எண்ணிக்கை..? எடை..? உள்ளிட்ட விபரங்களைக் கேட்டு ஆர்.டி.ஐ-ல் விபரம் கேட்க, அதில் பாதிக்கு மேல் பலவற்றைக் காணவில்லை என தெரியவர களேபரமடைந்துள்ளனர் பக்தர்கள்.

கோவிலினைப் பொறுத்தவரை நகைகள், சிலைகள், வாகனங்கள் மற்றும் சுவாமிப் பொருட்களுக்கென தனித்தனியாக இரண்டு கணக்குப் புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வரும். முதல் கணக்குப் புத்தகத்தின் அடிப்படையிலே, இரண்டாவது புத்தகம் இருக்கும். அதற்கு லெட்ஜர் 29 எனப் பெயர். 1972ம் ஆண்டு நடந்த தனிக்கையின் போது 361 விதமான நகைகள் இருந்ததாகவும், 1995ம் நடந்த இரண்டாம் தனிக்கையின் போது அதே எண்ணிக்கையில் பாதிக்கு மேல் மாயமாகி 133 விதமான நகைகள் மட்டுமே இருந்துள்ளதாக ஆவணம் தெரிவிக்கின்றது.

இதில் சுடர் சூடித்தந்த கனிகதுறை, கிளிப்பதக்கம், தங்க சங்கிலி கோர்க்கப்பட்ட கிளிப்பதக்கம், தாலிக்கோர்வை பதக்கம், முத்துசூட்டிய பதக்கம், இரத்தின பதக்கம்,அர்த்த சந்திர பதக்கம், வைர அட்டியல், சிவப்புக்கல் அட்டியல், 5 வடம் யக்ரை பவிதம், இரட்டைச்சரடு, புல்லக்கு, வெத்தலை சரப்புள்ளியில் கோர்த்த பதக்கம், இருதலை கிளிப்பதக்கம், இரத்தினங்கள் இழைத்த வைரசுட்டி, இரத்தினம் இழைத்த கிளி மாலை, 385 சிகப்புக்கற்கள் உள்ளிட்ட தொன்மை மிக்க நகைகள் மாயமாகியதாகவும், இது போல் லெட்சுமணன் நின்றிருக்க சீதையுடன் ராமர் யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஐம்பொன் சிலை, மரகத பச்சை அம்பாள் சிலைகள், சிவலிங்க ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட 162 சிலைகள் மற்றும் விக்கிரகங்களும் காணாமல் போய்விட்டதாக கூறுகிறது ஆர்.டி.ஐ.தகவல்.


பக்தர்களோ, ’’இங்குள்ள அனைத்துப் பொருட்களும், நகைகளும் சில சொற்ப ஆயிரங்களுக்கு வெளியில் போவது போல், அதிகாரிகளின் துணைக்கொண்டு அரசியல்வாதிகள் இந்த நகைகளையும், சிலைகளையும் கடத்தி விற்றிருக்கலாம். மாயமான அத்தனையும் மீட்க வேண்டியது அரசின் கடமை’’என்கின்றனர். நடவடிக்கை எடுக்குமா அரசு..?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)