
மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு குக்கி மற்றும் மெய்தி ஆகிய சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் வன்முறையாக மாறியது. இந்த மோதல் போக்கிற்கு நாட்டின் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பொதுமக்கள், பெண்கள், சிறார்கள் என பலர் இந்த வன்முறையில் கொல்லப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மணிப்பூர் வன்முறை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த கலவரம் தற்போது கட்டுக்குள் உள்ள நிலையில், மீண்டும் அம்மாநிலத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. மணிப்பூர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், உக்ரூல் மாவட்டத்தில் கடந்த மே 20ஆம் தேதுஇ ஷிருய் லில்லி திருவிழா நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த விழாவின் துவக்க நிகழ்விற்கு கலந்து கொள்வதற்காக செய்தியாளர்கள் வந்தனர். செய்தியாளர்களை ஏற்றி வந்த அரசு பேருந்துகளில், ‘மணிப்பூர் போக்குவரத்துக் கழகம்’ என எழுதப்பட்டிருந்ததை மறைத்து காகிதம் ஒட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக மாறி மாநில மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு மாநில மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி சென்றனர். போராட்டக்காரர்கள், ஆளுநரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், மாநில முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநில தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக போராட்டக்காரர்கள், பள்ளத்தாக்கு மாவட்டத்தில் மத்திய அரசு அலுவலகங்களை பூட்டி பலகைகளை சேதப்படுத்தியுள்ளனர். அதே போல் இம்பால் மேற்கில் உள்ள லம்பெல்பட்டில் உள்ள இந்திய புவியியல் ஆய்வு அலுவலகம் மற்றும் தலைமைத் தேர்தல் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் பூட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இம்பால் கிழக்கின் குராய் பகுதியில், துணை ஆணையர் அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று, ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் அதிகாரப்பூர்வ மன்னிப்பு கேட்கக் கோரினர். இதேபோன்ற காட்சிகள் இம்பால் மேற்கிலும் இடம்பெற்றன.