ADVERTISEMENT

மதுக்கடைகள் திறக்கப்பட்டால் நோய் தொற்று பரவும் வேகம் மேலும் அதிகரிக்கும்: இம்முடிவை கைவிட வேண்டும்: ராமதாஸ்

09:49 PM May 04, 2020 | rajavel



பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மதுக்கடைகள் வரும் 7-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7 மணி நேரம் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது தமிழ்நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்; இது மிகவும் துரதிருஷ்டவசமான முடிவாகும்.

ADVERTISEMENT


ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டு இதுவரை 40 நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில், மது கிடைக்காததால் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. மதுவுக்கு அடிமையாகி, அது இல்லாவிட்டால் வாழவே முடியாது என்று வர்ணிக்கப்பட்டவர்கள் கூட, இப்போது மதுவை மறந்து விட்டு புதிய மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். இது மிகப்பெரிய, ஆக்கப்பூர்வமான மாற்றம் ஆகும். இதை பயன்படுத்தி தமிழகத்தை மது இல்லாத திசையில் பயணிக்க வைக்க வேண்டிய தருணத்தில் மதுக்கடைகளை மீண்டும் திறந்திருப்பது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாத முடிவாகும். இந்த தவறான முடிவால் கடந்த 6 வாரங்களாக விளைந்த நன்மைகள் அனைத்தும் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் மூன்றாவது ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பாக இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நான், தமிழ்நாட்டில் இனி எந்தக் காலத்திலும் மதுக்கடைகள் திறக்கப்படக்கூடாது என்று கூறியிருந்தேன். தமிழக அரசும் மூன்றாவது ஊரடங்கு தொடர்பான அறிவிப்பில் மதுக்கடைகள் திறக்கப்படாது என்று அறிவித்திருந்தது. ஆனால், மூன்றாவது ஊரடங்கு நடைமுறைக்கு வந்த முதல் நாளே மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

மதுக்கடைகளை மீண்டும் திறப்பதற்காக தமிழக அரசு கூறியுள்ள காரணம் சற்றும் ஏற்க முடியாதது. தமிழக எல்லைகளில் உள்ளவர்கள் மது அருந்துவதற்காக அண்டை மாநிலங்களுக்கு செல்வதால் அதை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த காரணமே தமிழக அரசின் தோல்வியாக பார்க்கப்படக் கூடும். அதுமட்டுமின்றி, மதுவிலக்கு என்ற கோரிக்கை எழும் போதெல்லாம்,‘‘கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு இருக்கிறது’’ என்ற பழைய வசனத்தைக் கூறியே கடந்த கால ஆட்சியாளர்கள் மதுவிலக்கை மறுத்து வந்துள்ளனர். அதே காரணத்தை இப்போதைய அரசும் கூறுவது சரியல்ல. அண்டை மாநிலங்களுக்கு மது அருந்த ஒரு சிலர் சென்றிருக்கலாம். அது தமிழகத்தின் மக்கள்தொகையில் 0.0001% கூட இருக்காது. அவர்களுக்காக தமிழகத்தில் ஒன்றரை கோடி குடும்பங்களை பாதிக்கும் வகையில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை ஏற்க முடியாது. இது தமிழகத்தின் சூழலையே முற்றிலுமாக மாற்றிவிடக் கூடும்.


தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு எவரேனும் சென்றால், அவர்கள் பிடிக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதே போல், மது அருந்த எவரேனும் அண்டை மாநிலங்களுக்கு சென்றால் அவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து தனிமைப்படுத்த வேண்டும். அத்தகைய கடுமையான தண்டனை வழங்கினால் எவருக்கும் அண்டை மாநிலங்களுக்கு சென்று மது அருந்தும் துணிச்சல் வரவே வராது. அதை விடுத்து தமிழ்நாட்டிலேயே மதுக்கடைகளை திறந்து வைத்து சூழலை கெடுப்பது நியாயமல்ல.

கோயம்பேடு சந்தையில் நடந்த ஊரடங்கு மீறல்கள் காரணமாக கடந்த சில நாட்களாக கரோனா நோய் தொற்று மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. மதுக்கடைகள் திறக்கப்பட்டால் நோய் தொற்று பரவும் வேகம் மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, கடந்த 40 நாட்களாக இல்லாமல் இருந்த சட்டம் & ஒழுங்கு பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். எனவே, மதுக்கடைகளை திறப்பதால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து, இம்முடிவை அரசு கைவிட வேண்டும்; மதுவிலக்கை அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT