Advertisment

தமிழக காங். தலைவர்கள் ஒருவருக்கு கூட டெபாசிட் வாங்கும் தகுதி இல்லை! ராகுலுக்கு ஜான்சிராணி புகார் மனு!

Jhansirani

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மகிளா தலைவர் ஜான்சிராணி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

Advertisment

அதில் கூறியிருப்பதாவது, “நிலக்கோட்டை தொகுதி மக்களால் பலமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுதி மக்களுக்கு அயராதுதொண்டாற்றி, காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக மிளிர்ந்த எனது பாட்டி ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்களை சிறு வயது முதல் பார்த்து வளர்ந்து, அவர் வழியில் மக்கள் பணியாற்றிட காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தவள் நான்.

Advertisment

எனது பாட்டி அவர் ஆற்றிய தொண்டிற்காகவே 1957-1996 வரையிலான காலகட்டங்களில் ஏழுமுறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பழனி, சோழவந்தான் தொகுதிகளில் தலா ஒருமுறையும் நிலக்கோட்டைத் தொகுதியில் 5 முறையும் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தற்காலிக சபாநாயகராக இருந்து கலைஞர், ஜெயலலிதாவிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த பெருமையும் அவருக்கு உண்டு. பல்வேறு பதவிகளும் வாய்ப்புகளும் வந்தபோதும் அதை ஏற்காமல் நிலக்கோட்டைத் தொகுதிக்காகவே சேவை செய்தார். நிலக்கோட்டைத் தொகுதியில் நிகழ்ந்துள்ள அத்தனை வளர்ச்சிப் பணிகளிலும் அவரது உழைப்பு இருக்கிறது. கிராமப்புறங்களுக்கு சாலை வசதி, போக்குவரத்து வசதி, பள்ளிக்கூடங்கள், சமூகக் கூடங்கள், நீர் ஆதாரங்கள், வீடுகள் மற்றும் தொழில் வாய்ப்புகளை அவர் உருவாக்கிக் கொடுத்தார்.

நிலக்கோட்டையில் உள்ள பெண்கள் கல்லூரி அவரது கனவுத் திட்டம். கிராமப்புற பெண்கள் மேற்படிப்பிற்காக தொலைவில் உள்ள கல்லூரிகளுக்குப் போக முடியாததால் பள்ளியோடு நின்றுவிடுவதைத் தடுக்கும் வகையில், அவர் நிலக்கோட்டையில் பெண்கள் கல்லூரி கொண்டு வர பெரும் முயற்சிகள் எடுத்தார். அப்போதிருந்த தி.மு.க அரசுக்கு அழுத்தம் கொடுத்து தொகுதி மக்கள் மற்றும் நல விரும்பிகளிடம் சேகரித்த மற்றும் சொந்தப் பணத்தை வைத்து அவர் நிலக்கோட்டை கிராமப்புற பெண்கள் கல்லூரியைத் தோற்றுவித்தார். இன்று அதில் ஆயிரக்கணக்கானப் பெண்கள் பயின்று வருகின்றனர். தொகுதியின் நலத் திட்டங்களுக்காக தனது சொத்துக்களை விற்று தனது சொந்தப் பணத்தை செலவு செய்தார்.

அது மட்டுமல்ல, பின் தங்கிய நிலையில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை எந்த பிரதிபலனுமின்றி வாங்கிக் கொடுத்தார். இறுதிவரை ஊழலற்ற அரசியல்வாதியாக இருந்து கட்சி பேதமின்றி அனைவரும் மதிக்கும் தலைவராக வாழ்ந்து மறைந்தார். கர்ம வீரர் காமராஜருக்கு இணையான வகையில் எளிமையாகவும் நேர்மையாகவும் அரசியல் தொண்டாற்றியவர், தனது இறுதி காலத்தில் நோய்வாய்பட்டிருந்தபோதும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டவர் எனது பாட்டி ஏ.எஸ்.பொன்னம்மாள். இதை அறிந்த காங்கிரஸ் தலைவர் பெரும் மதிப்பிற்குரிய ராகுல் காந்தி தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியதோடு பாட்டியைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கவும் முன் வந்தார். அது மட்டுமல்லாமல் அவரது மறைவிற்குப் பிறகு என்னை தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராகவும் நியமனம் செய்து மக்கள் பணியாற்றிட வாய்பளித்தார் ராகுல் காந்தி.

எனது பாட்டியின் வழியில் நானும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நிலக்கோட்டைத் தொகுதியில் நற்பணிகள் செய்து வருகிறேன். கட்சி பாகுபாடின்றி எனது பாட்டியைப் போலவே தொகுதி மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறேன். நிலக்கோட்டைத் தொகுதி மக்கள் என்னை எனது பாட்டியின் உருவாகவே பார்க்கிறார்கள். நிலக்கோட்டைத் தொகுதியைப் பொறுத்தவரை ஏ.எஸ்.பொன்னம்மாள் என்பது வெறும் பெயரல்ல; நிலக்கோட்டையின் பெருமைமிகு அடையாளம்.

ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நபர்கள் இத்தகைய வரலாறு எதையும் கவனத்தில் கொள்ளாமல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து நின்று வெல்ல வாய்ப்புள்ள ஒரே தொகுதியான நிலக்கோட்டை தொகுதியைக் காங்கிரஸுக்கு பெறுவதில் சிறிதும் கவனம்செலுத்தவில்லை என்பது நிலக்கோட்டை மக்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமது வாரிசுகளுக்கும், மாமனார், மாமியார் உள்ளிட்ட உறவினர்களுக்கு ’சீட்’ பிடிப்பதிலும், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட 25 இடங்களில் ஓரிரு இடங்களைக் கூட கட்சிக்காக உழைக்கும் நபர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொறுப்புணர்வு இல்லாமலும் செயல்படுவது உண்மையான காங்கிரஸ் தொண்டர்களுக்கு கடும் வேதனையை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தனித்துப் போட்டியிட்டாலே வெல்லக்கூடிய தொகுதிகள் உண்டு. தலைவர்களும் உண்டு. ஆனால் இந்த இரு கட்சிகளை விட பாரம்பரியம் உள்ள காங்கிரஸ் இயக்கத்தில் இத்தனை வருடம் இருந்து என்னைப் போன்ற சாமானிய தொண்டர்களின் உழைப்பில் பதவி சுகங்களை அனுபவித்து வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒருவருக்கு கூட கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறும் - அவ்வளவு ஏன் டெபாசிட் வாங்கும் - தகுதி கூட இல்லை என்பது எத்தனை அவலமானது? அகில இந்திய தலைமை எதை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியதோ அதை மட்டுமே செய்வதைத்தான் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்கள்.

சுயநல மற்றும் வாரிசு அரசியலை விட்டொழித்து, கட்சியின் நலனை முன்னிறுத்திப் பணி செய்ய வேண்டும் என ராகுல் காந்தி எதிர்பார்க்கிறார். அதற்காகவே அவர் உழைக்கிறார். ஆனால், ஜெயிக்க பெரும் வாய்ப்புள்ள நிலக்கோட்டை போன்ற தொகுதிகளை விட்டுக்கொடுத்து காங்கிரஸ் பேரியக்கத்தை படுகுழியில் தள்ளும் செயலைத் தலைவர் செய்கிறார்.

இந்தப் போக்கு என்னைப் போன்ற மக்கள் பணியாற்ற வந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் தருவதாக உள்ளது. இனிமேலும் மவுனம் காப்பது என்பது நான் பணியாற்றும் நிலக்கோட்டை மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும் என்று கருதுகிறேன். எனவே, எனது மக்களை சந்தித்து இன்னும் இரு நாட்களில் எனது அடுத்தகட்ட பயணம் குறித்து முடிவெடுக்க உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இறுதி மூச்சு உள்ளவரை நான் சார்ந்த நிலக்கோட்டை மக்களின் நலன்களுக்காக பணியாற்றுவேன்” என்று தனது மனுவில் தெரிவித்திருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியைப் பற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு ஜான்சிராணி புகார் மனு அனுப்பி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mahila Congress nilakottai Rahul gandhi tn assembly election
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe