Tamil Nadu government notification on Attention of passengers traveling in omni buses

தமிழகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் வெளிமாநில பதிவு எண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படுவதால் தமிழக அரசுக்கும் போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம், சாலை வரி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது.

Advertisment

ஆனால், அவை முழுமையாக பின்பற்றப்படாத சூழ்நிலையில் ஜூன் 14ஆம் தேதி முதல் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்கக் கூடாது எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் கொடுத்திருந்தனர். இதனையடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கான கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டிருந்தனர். அதன் அடிப்படையில், தமிழக அரசு நேற்று (17-06-24) வரை அதற்கான அனுமதி வழங்கியது.

Advertisment

இதனையடுத்தி, சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை, திங்கட்கிழமை (பக்ரீத் பண்டிகை) என தொடர் விடுமுறை காரணமாக பயணிகளின் நலன் கருதி இன்று (18-06-24) காலை வரை தமிழகத்தில் வெளிமாநில பேருந்துகளை இயக்க அனுமதி அளித்திருந்தனர். இந்த நிலையில், இன்றுடன் அதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள மக்கள் அதனை உடனே ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘விதிகளை மீறி இயங்கும் ஆம்னிப் பேருந்துகளால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. மேலும் இத்தகைய பேருந்துகளின் உரிமையாளர்கள் பிற மாநிலங்களில் தவறான ஆதாரங்களை சமர்ப்பித்து விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் முறைகேடாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் இயக்கி வருகின்றனர். பிற மாநில ஆம்னிப் பேருந்துகளின் முறைகேடான இயக்கத்தால், விபத்துகள் நேரிடும்பொழுது விதிகளை மீறி இயக்கப்பட்ட காரணத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீடும் நிராகரிக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு தேவையற்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே, முறைகேடாகவும், விதிகளை மீறியும் இயக்கப்படும் ஆம்னிப் பேருந்திகளின் இயக்கத்தை இனி அனுமதிக்கப்பட மாட்டாது. பொதுமக்கள் எவரும் அத்தகைய விதிகளை மீறி தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

Advertisment

அத்தகைய விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளின் விவரங்கள் www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளில் பொதுமக்கள் முன்பதிவு செய்திருந்தால் அதனை உடனடியாக ரத்து செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விதிகளை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்திகள் இனி முடக்கப்படும் என்பதால் அதில் பயணிக்க வேண்டாம். இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்காது’ என்று தெரிவித்துள்ளது.