Skip to main content

’’எஸ்.வி.சேகர் செய்த குற்றத்தை மன்னிக்க முடியாது!’’ - நீதிபதி ராமதிலகம் அதிரடி

Published on 10/05/2018 | Edited on 11/05/2018
ramathilagam

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் எஸ்.வி.சேகரின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த முன் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணங்களை நீதிபதி ராமதிலகம் தனது உத்தரவில், ’’எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியவர் தவறான முன்னுதாரணமாக இருந்துவிட்டார்.  பேஸ்புக் கருத்தை உள்நோக்கத்துடன் பரிமாற்றம் செய்ததாக தெரிகிறது.  குழந்தை செய்த தவறை மன்னிக்கலாம்.  வளர்ச்சி, முதிர்ச்சி பெற்ற நபர் செய்யும் குற்றங்களை மன்னிக்க முடியாது.  பணிபுரியும் பெண்கள் பற்றி பதிவில் கூறியிருந்ததை விட கடுமையாக கூற முடியாது.  கருத்து பகிர்ந்ததை குறித்து மட்டுமே எஸ்.வி.சேகர்  வருத்தம் தெரிவித்துள்ளார்.  ஆனால், பதிவில் இருந்த கருத்துக்களை எஸ்.வி.சேகர் மறுக்கவில்லை. பெண்களுக்கு எதிரான இது போன்ற கருத்துக்களை கூற யாருக்கும் உரிமையில்லை.

 

 


படுக்கையை பகிர்ந்துகொள்வதால் மட்டும்தான் பெண்கள் மேலே வரமுடியுமா? உயர் பதவியில் உள்ள் அனைத்து பெண்களுக்கும் இது பொருந்துமா? உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொள்வது என்பது தலைவருக்கான ஒரு குணம். சமூக உயர்  அந்தஸ்தில் உள்ள ஒருவர் சமூக அமைதியை உறுவாக்க வேண்டும்.  வேற்றுமையையும் பதற்றத்தையும் உண்டாக்க கூடாது.

 

கருத்தை பேசவும் எழுத்துப்பூர்வமாக சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.  எழுத்துப்பூர்வமாக சொல்லும்போது அது ஆவணமாக மாறிவிடுகின்றது.  சமூக வலைத்தளத்தில் எதையும் சொல்லிவிட்டு தப்பிவிடலாம் என்று நினைக்கக்கூடாது. எஸ்.வி.சேகரின் கருத்து பெண்ணினத்திற்கு எதிரானது.’’என்று தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆடையை கழட்டுமா...” - நீதி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A case of judge for A woman who went to court seeking justice in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், கரெவுளி மாவட்டத்தில் உள்ள ஹிண்டாவுன் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இந்த நிலையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி சில மர்ம கும்பல், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தின் நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அப்போது, நீதிபதி காயங்களை காட்டுவதற்காக அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றும்படி கூறியதாக கூறப்படுகிறது. 

இதில் அதிர்ச்சியடைந்த பெண், இது தொடர்பாக நீதிபதி மீது போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரில், ‘என் வாக்குமூலத்தைப் பெற நீதிபதி என்னை அழைத்திருந்தார். அதன்படி, நான் நீதிமன்றத்திற்கு சென்று முழு அறிக்கையை கொடுத்தேன். அதன் பிறகு, நான் வெளியே வர ஆரம்பித்தேன். அப்போது, நீதிபதி என்னை மீண்டும் திரும்ப அழைத்தார். அப்போது, அவர் என் ஆடைகளை கழற்றச் சொன்னார். அதற்கு நான், ஏன் என் ஆடைகளை கழற்ற வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர், என் உடலில் உள்ள காயங்களை பார்க்க விரும்புவதாக கூறினார். உங்க முன்னாடி என்னால துணியை திறக்க முடியாது என்று கூறி, மறுப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியே சென்று விட்டேன்’ என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஹிண்டாவுன் நகர போலீசார் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நேற்று (03-04-24) வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை ஆடைகளை கழற்ற சொன்ன நீதிபதி மீது வழக்கு பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது