Supreme Court sets deadline President raises 14 questions

Advertisment

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி (08.04.2025) பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், ‘தமிழக அரசின் சார்பில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்ற மசோதா உட்பட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது. 2வது முறையாக மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டபோது ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார்.

ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும். இந்த 10 மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது. அந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்திருந்தது. மேலும் அந்த தீர்ப்பில், “ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்கவில்லை என்றால் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யலாம்.

மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும். இந்த தீர்ப்பை அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும், ஆளுநர்களின் முதன்மைச் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசன விதிகளை மீறும் வகையில் உள்ளது எனத் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 அரசியல் சாசன கேள்விகள் அடங்கிய குறிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இன்று (15.05.2025) அனுப்பி இருந்தார்.

Advertisment

அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200இன் அடிப்படையில் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது அவர் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நீதிமன்ற தீர்ப்புகள் மூலமாக நிர்ணயிக்க முடியுமா?. அத்தகைய அதிகாரங்கள் நீதிமன்றங்களுக்கு இருக்கின்றதா?, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 201வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாக்கள் மீதான முடிவுகளை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியுமா?.

Supreme Court sets deadline President raises 14 questions

இந்த தீர்ப்பை அளிப்பதற்கு முன்பு இத்தகைய அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்திருக்க வேண்டாமா?’என பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதனை உச்சநீதிமன்றத்தில் விசாரிப்பதற்காகச் சிறப்பு அரசியல் சாசன அமர்வு நாளை (16.05.2025) அமைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த கேள்விகளை விசாரிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.