Skip to main content

சென்னையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்; உதவி எண்கள் அறிவிப்பு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Supply of drinking water through trucks in Chennai; Notification of helpline numbers

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் சென்னையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வாயிலாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. குடிநீர் விநியோகத்தைப் பெற பொதுமக்கள் 1916 மற்றும் 044 - 45674567 ஆகிய கட்டணமில்லா தொலைப்பேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். தெருநடைகள், குடிநீர் வாரியத்தின் குடிநீர்த் தொட்டிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் (படங்கள்)

Published on 27/02/2024 | Edited on 27/02/2024

 

 

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள், பணி நிரந்தரம் கோரி மற்றும் திமுக அரசின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் தமிழக மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள், சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் அருகே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார்.

Next Story

கலைஞர் நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்! 

Published on 26/02/2024 | Edited on 27/02/2024

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கலைஞர் சதுக்கத்திற்கு கீழே ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடங்களில் அண்ணா சிலை, திருவாரூர் - சென்னை ரயில் பயண ஒலி-ஒளிக் காட்சி, சாதனை விளக்கப் புகைப்படத் தொகுப்புகள், கலைஞர் பொன்மொழிகள் கலைஞர் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து எனப் பலரும் கலந்து கொண்டனர்.