Skip to main content

இலங்கை விரும்புவது இந்தியாவையா சீனாவையா? - வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் சொல்லும் உண்மை

Published on 15/04/2018 | Edited on 15/04/2018
tt1

 

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நான்கு நாள் ஒய்வு எடுப்பதற்காகவும் சித்த வைத்திய சிகிச்சைக்காகவும் நெல்லை மாவட்டத்தின் ஆழ்வார்குறிச்சிக்கு இன்று காலை வந்தார். பின்னர் அவர் அருகில் உள்ள குற்றாலம் நிகழ்ச்சிக்காக சென்றார்.  

 

இந்தியாவுடனான இலங்கையின் உறவு நெருக்கமானதாக தெரியவில்லை, ஆனால் சீனாவுடனான  நெருக்கத்தை இலங்கை அரசு வெளிப்படையாக காட்டுகிறது என  நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

 

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சித்த மருத்துவ நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன்,  ’’இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இல்லை.   இதனால் ஆட்சியில் கூட்டணியில் உள்ள இரு கட்சிகளும் ஒன்றையொன்று குறை கூறி வருகிறது. 2020 வரை ஆட்சியை கொண்டு செல்ல பிரதமரும் ஜனாதிபதியும் முயன்று வருகின்றனர். தமிழர்களின் உரிமைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது அவர்களது விளை நிலங்கள் அரசே அபகரித்து சிங்களர்களுக்கு வழங்குகிறது. இதனால் தமிழ் மக்கள் வீ்டுகளை,  விளை நிலங்களை இழந்து தவிக்கும் நிலை உள்ளது, அவர்களுக்கு அதனை பெற்றுத் தரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். வடக்கு கிழக்கு மாகாண மீனவர்களுக்கு மீன்பிடி உரிமையும் பறிபோகிறது,  தெற்கிலிருந்து சிங்களர்களை அழைத்து வந்து மீன்பிடிக்க செய்கின்றனர். இவை  அனைத்தையும் சரி செய்ய மாகாணங்களிற்கான அரசியல் அதிகாரம் போதுமானதாக  இல்லை. 1987 ல் கிடைத்த அரசியல் அதிகாரம் போதுமானதாக இல்லை. அடுத்தடுத்து இயற்றப்பட்ட சட்டங்களால் அந்த உரிமையும் பறிபோய்விட்டது. அரசு அதிகாரிகளே மாகாண அரசின் அதிகாரத்தின் கீழ் இல்லை, வடக்கு மாகாண பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள   1.5 லட்சம் ராணுவ வீரர்களை அப்புறப்படுத்த மறுக்கிறது, விளைநிலங்கள்,  கட்டிடங்கள் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது இலங்கை அரசுக்கும், இந்தியாவுக்குமான உறவு நெருக்கமானதாக தெரியவில்லை. ஆனால் இலங்கை அரசு  சீனாவுடன் வெளிப்படையாக அதிக நெருக்கம்  காட்டி வருகிறது. அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என தெரியவில்லை. வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகை கணிசமாக குறைந்து விட்டது. வெளிநாடு அகதிகளாக உள்ளவர்கள் மீண்டும்  குடியேற்றப்பட வேண்டும் அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும் இலங்கையில் தற்போது தனி நாடு கோரிக்கை இல்லை மாநில சுயாட்சி வேண்டும் ஒரே இலங்கை என்பதே கோரிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்.

 

குற்றாலம் குறும்பலா மூலிகை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் குற்றாலம் பவ்டா நிறுவனத்தில் சித்திரை திருநாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நூல் வெளீட்டு நிகழ்ச்சியும், தயாரிப்புகள் அறிமுக நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கு இலங்கை வடக்கு மாகாணம் முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமை வகித்தார்.இந்திய அரசு சித்தா தேசிய நிறுவனத்தின் சென்னை இயக்குநர் பேராசிரியர் டாக்டர் வி.பானுமதி நூலை வெளியிட  பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் நீலாவதி பெற்றுக்கொண்டார்.

 

இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் - திரு.விக்னேஷ்வரன் நெல்லை மாவட்டத்தில் பழைய குற்றாலம் ரோட்டில் உள்ள பவ்டா ஹோட்டலில் சித்தா டாக்டர் - சினிவாசன் தலைமையில் -வீரசிம்ம அவலோகணம் என்னும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளார்.

 

மன அமைதிக்காக வந்த விக்னேஷ்வரன் நெல்லை மாவட்ட ஆலயங்களில் தரிசனம் செய்யவும் உள்ளார்.

 
-பரமசிவன்

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை வேண்டும்'-அன்புமணி வலியுறுத்தல்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
'Action should be taken without further delay'-Anbumani insists

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் இன்று தமிழகம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தொடர்கதையாகி வரும் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ' வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு  அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த  ராமேஸ்வரம் மீனவர்கள்  21 பேரை சிங்கள கடற்படையினர்  கைது  செய்துள்ளனர். அவர்கள் மீன் பிடிக்கச் சென்ற 2 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  பாரம்பரியமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை பன்னாட்டு விதிகள் அனுமதிக்கும் போதிலும், அந்த விதிகளை மீறி தமிழக மீனவர்களை  சிங்கள கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்யும் நிகழ்வுகள் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகின்றன.  கடந்த 10-ஆம் தேதி தான் வங்கக்கடலின் இரு பகுதிகளில் 22 தமிழக மீனவர்களும்,  15-ஆம் தேதி  15 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.   அதனால், அந்தப் பகுதிகளில்  ஏற்பட்ட பதட்டமும், கவலையும்  விலகுவதற்கு  முன்பே  மேலும் 21  மீனவர்களை  சிங்களக் கடற்படை கைது செய்திருப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

'Action should be taken without further delay'-Anbumani insists

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 58 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். கடந்த இரு மாதங்களில் 80-க்கும் கூடுதலான மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்வதை  மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழக மீனவர்களை கைது செய்யக்கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி சிங்களக் கடற்படையினரின்  அத்துமீறல்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது தூதரக அடிப்படையிலான  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மற்றொருபுறம்  தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா - இலங்கை  அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் படையினரால்  கைது செய்யப்பட்டுள்ள  58 மீனவர்களை விடுதலை செய்யவும், தமிழக மீனவர்களின் அனைத்துப் படகுகளையும் மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.