Skip to main content

சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி!

Published on 22/04/2018 | Edited on 22/04/2018
sitaram

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராக மீண்டும் சீதாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி இதுதான்:

 

  கட்சியின் அகில இந்திய மாநாடு கடந்த 4 நாட்களாக விஜயவாடாவில் நடைபெற்றது.  இறுதியாக கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் போட்டி வந்தபோது கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஆன பிரகாஷ்காரத்  கொடுத்த வரைவு அறிக்கையும் சீதாராம் யெச்சூரி கொடுத்த அறிக்கையும் மிக முக்கியமான விவாதப்பொருளாக மாறியது.  சீதாராம் யெச்சூரி அகில இந்திய அளவில் இப்போதுள்ள நிலையில்  முதல் எதிரி பாரதிய ஜனதாதான் . ஆகவே பாஜகவை வீழ்த்த அகில இந்திய அளவில் நம் கட்சி ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என தனது அரசியல் அறிக்கையில் கூறியிருக்கிறார்.  ஆனால், பிரகாஷ் காரத் கொடுத்த அரசியல் வரைவு அறிக்கையில் இந்தியா முழுக்க பாஜகவும் காங்கிரசும் இரண்டு கட்சியும் ஆபத்தானவை. ஆகவே இரு கட்சிகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மாற்று அணியாகத்தான் இருக்க வேண்டும் என்று தனது நீண்ட அறிக்கையில் கூறியிருந்தார்.

 

 இந்த இரு அறிக்கைகளும் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் கடுமையாக விவாதம் நடத்தினார்கள்.  ஒரு கட்டத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சி கேரளாவுக்கு மட்டும் சொந்தமா? என விவாதம் போனது.  மூத்த தோழர்கள் தலையிட்டு யெச்சூரி மற்றும் பிரகாஷ்காரத் கொடுத்த அறிக்கைகளை ஆய்வு செய்து இன்றைய சூழலில் ஒவ்வொரு மாநிலத்திற்கு தகுந்தமாதிரி அந்தந்த மாநில கமிட்டிகள் முடிவெடுக்க வேண்டும்.   அதில், ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு நேர் எதிரான நிலையும் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் உள்ள கட்சிகளோடு கூட்டணி ஏற்படுமாயின் அப்போது காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என முடிவு செய்தனர்.

 

ஒரு வகையில் பிரகாஷ்காரத் கொடுத்த வரைவு அறிக்கையை நிராகரிக்காமல் சீதாராம் யெச்சூரி கொடுத்த அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு கட்சிக்குள் தேவையற்ற குழு மனப்பான்மையை வளர்க்காமல் இதை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு நிகழ்வாக மீண்டும் இரண்டாவதுமுறை சீதாராம் யெச்சூரியை அகில இந்திய பொதுச்செயலாளராக தேர்வு செய்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்