ADVERTISEMENT

“நானே முதல்வராக நீடிப்பேன்” - சித்தராமையா உறுதி

12:54 PM Nov 03, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடகா மாநிலச் சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதில், 224 சட்டமன்றத் தொகுதிகளில் அதிகபட்சமான 135 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி அமையும்போதே முதல்வர் பதவிக்கு சித்தராமையாவுக்கும், டி.கே. சிவக்குமாருக்கு கடும் போட்டி மோதல் நிலவியது.

இதனையடுத்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு கர்நாடகா முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரையும் நியமித்து கட்சி மேலிடம் அறிவித்தது. மேலும், அதில் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோர் தலா 2.5 ஆண்டுகள் முதல்வராகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கட்சி மேலிடம் கூறியதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து, சித்தராமையா தான் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் முதல்வர் பதவியில் நீடிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தார்கள். இதனால், சித்தராமையாவின் ஆதரவாளர்களுக்கும், டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்களுக்கும் அவ்வப்போது உள்கட்சி மோதல் ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டி வந்தனர்.

இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னரோ அல்லது அதற்கு முன்னரோ கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருக்காது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இந்தியாவில் எங்குமே இருக்காது. கர்நாடகா மாநிலத்தில் ‘ஆபரேஷன் தாமரை’ விரைவில் மேற்கொள்ளப்படும்” என்று கூறியிருந்தார். இது அப்போது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே, பா.ஜ.க தரப்பில் காங்கிரஸ் கட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் நடத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் முதல்வர் சித்தராமையா, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், வரும் நாட்களில் நானே முதல்வராக நீடிப்பேன் என்று கூறியுள்ளார். இது குறித்து சித்தராமையா கொப்பலில் நேற்று (02-11-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பா.ஜ.க தலைவர்கள் பகல் கனவு காண்கிறார்கள். கர்நாடகாவில் 5 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி இருக்கும். மீண்டும் மக்களை சந்தித்து வெற்றி பெறுவோம். தற்போது நான் முதல்வராக இருக்கிறேன். வரும் நாட்களில் நானே முதல்வராக நீடிப்பேன். ஆட்சி அதிகாரம் இல்லாததால் பா.ஜ.க தலைவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT