Skip to main content

‘செந்தில்பாலாஜி ராஜினாமா ஏற்பு’ - ஆளுநர் ஆர்.என். ரவி அறிவிப்பு

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Senthilbalaji Resignation Accepted Governor R.N. Ravi

போக்குவரத்துத் துறையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். அதே சமயம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட்12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். இதற்கிடையே இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில்பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து முதல்வர் அலுவலகத்திற்கு நேற்று கடிதம் அனுப்பி இருந்தார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு செந்தில்பாலாஜி எழுதியிருந்த கடிதத்தில், “தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்கிறேன். தங்களது தலைமையின் கீழ் மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. நீதிக்காகப் போராட தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி. தான் நிரபராதி,  உண்மையைக் வெளிக் கொண்டு வர சட்ட ரீதியாக தொடர்ந்து போராடுவேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (12.02.2024) தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து  கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநர் ஆர்.என். ரவி அங்கீகரித்து செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சுமார் ஏழு மாதங்களுக்கு மேலாக செந்தில்பாலாஜி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை அமர்வு நீதிமன்றம், உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

எம்.பி பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Rahul Gandhi resigned as wayanad MP!

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றியும் பெற்றார். தொடர்ந்து வயநாடு தொகுதியின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியது.

14 நாட்களில் இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டுமென்ற நிலை ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ராகுல்காந்தி வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்வது என்ற முடிவை நேற்று முன்தினம் (17-06-24) அறிவித்தார். ராகுல்காந்தியின் முடிவை தொடர்ந்து வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.  

இந்த நிலையில், வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி நேற்று (18-06-24) அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது. 

Next Story

'பாஜகவின் அதிகார வெறி இதன் மூலம் தெரிகிறது''-செல்வப்பெருந்தகை பேட்டி

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
"BJP's hunger for power is evident through this" - Selvaperunthakai interview

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் கடந்த 17.06.2024 அன்று காலை 9 மணியளவில் நின்று கொண்டிருந்த சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ரயில் விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ''உபகரணங்கள் வாங்குவதற்கு பதிலாக, பாதுகாப்பிற்கு செலவு செய்வதற்கு பதிலாக, ஆடம்பர வீடுகள் கட்டுவதும், சுற்றுலா மாளிகை கட்டுவதும், அந்தச் சுற்றுலா மாளிகை பங்களா வீடுகளுக்கு விலை உயர்ந்த பர்னிச்சர்களை வாங்குவதிலும் இவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள இடத்தில் இவர்கள் கவனம் செலுத்தவில்லை என்று தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு சிஏஜி அறிக்கை சொல்கிறது. ஆனால் மெத்தனபோக்கோடு இப்படி விபத்துகளை தொடர்ந்து பாஜக அரசு அனுமதித்து இருக்கிறது.

காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகவும், ரயில்வேதுறை அமைச்சராகவும் இருந்த ஓ.வி.அழகேசன் அரியலூர் விபத்து ஏற்பட்டவுடன் பதவியை ராஜினாமா செய்தார். சாஸ்திரியும் ராஜினாமா செய்திருக்கிறார். மம்தா பானர்ஜியும் ரயில்வேதுறை அமைச்சராக இருந்த பொழுது விபத்து நடத்தவுடன் ராஜினாமா செய்தார். நிதிஷ்குமார் ரயில்வே துறை அமைச்சராக இருந்த பொழுது ராஜினாமா செய்தார். ஏன் பாஜக அமைச்சர்கள் மட்டும் ராஜினாமா செய்ய மறுக்கிறார்கள். பிடிவாதமாக இருக்கிறார்கள். அதிகார வெறி என்பது இதன் மூலமாக தெரிகிறது. ஆகவே இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட விபத்துக்களை தவிர்க்க வேண்டும். சிஏஜி அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் லட்சக்கணக்கான கோடி நிதியை அதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்''என்றார்.