ddd

திருச்சி திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து, பெல் நிறுவனம் அருகே தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் இயக்குநர் கரு.பழனியப்பன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

Advertisment

அதில், “பொதுவாக தமிழ்நாட்டில் தேர்தல் என்பது இருபெரும் கட்சிகளுக்கிடையேயான போட்டியாக இருந்தது. காங்கிரஸ் - திமுகவிற்கும், அதன் பின்பு திமுக - அதிமுக ஆகிய கட்சிகளுக்கும் போட்டியாக இருந்தது. ஆனால் இந்தமுறை மக்கள் நலன் குறித்து சிந்திப்பவர்கள் ஓர் அணியாகவும், மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டவர்கள் ஓர் அணியாகவும் போட்டியிடுகிறார்கள். ஸ்டாலின் எனும் ஒருவர்தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்துவிடக் கூடாது என்பதற்காக மோடி முதல் கமல்ஹாசன் வரை விரும்புகிறார்கள்.

Advertisment

1989இல் ஜெயலலிதா மோசமாக நடத்தப்பட்டார் என மோடி தற்போது பேசியிருக்கிறார். அதன் பின்பு பலமுறை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அதற்கு வழக்கு போடவில்லை. ஏன் என்றால், அந்தச் சம்பவம் உண்மையில்லை. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கலைஞர், கல்லூரியில் கட்டணசலுகை வழங்கினார். தற்போது ஸ்டாலின் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்கிறார். இதுதான் ஓர் இயக்கத்தின் வளர்ச்சி.

நகர அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்கிற அறிவிப்பு இலவச திட்டம் அல்ல. இலவசங்கள் மக்களை சோம்பேறிகளாக்கிவிடாது. அது பெண்களுக்கான மாபெரும் விடுதலை. தமிழ்நாட்டில் அனைத்து மத மக்களும் இணக்கமாக வாழ்ந்து வரும் நிலையில், மத வேறுபாட்டைத்தான் முதலில் நுழைக்கப் பார்கிறார்கள். இது பெரியார் மண்ணா என கேட்ட பாஜகவினர், இன்று அவ்வாறு பேச மாட்டார்கள். வாக்கு பெற பெரியார் படத்திற்கு மாலை போடக் கூட அவர்கள் தயங்கமாட்டார்கள்.

Advertisment

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க என்பது கரோனாவை விட கொடியது. அது வேகமாக பரவக்கூடியது. அதை நாம் பரவவிடக்கூடாது. உழைக்கும் தொழிலாளிகளை மேலும் சுரண்டவே பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குகிறார்கள். அனைத்து உரிமைகளையும் பறிப்பதற்காகவேதான். எந்தப் பொதுத்துறை நிறுவனங்களையும் தொடங்காத மோடி, பொதுத்துறை நிறுவனங்களை அம்பானியிடம் கொடுப்பதா, அதானியிடம் கொடுப்பதா என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

அதிமுக கூட்டணி ஒரு தொகுதியில் வென்றால்கூட, அது பாஜக வென்றதைப் போன்றதுதான். இந்த நாடு பாஜகவால்தான் உடையப்போகிறது. ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை திணித்தால் யாரும் தாங்க மாட்டார்கள். இந்தத் தேர்தல் ஆரியத்திற்கும் - திராவிடத்திற்கும் நடக்கும் போர்;இந்தத் தேர்தல் சித்தாந்தத்திற்கிடையே நடக்கும் சண்டை. பாஜகவை தோல்வியடைய வைப்பது மட்டுமல்ல, அவர்கள் கூட்டணியில் இருக்கும் அனைவரையும் தோல்வியடையச் செய்து, தேர்தல் குறித்து இனி அவர்களை சிந்திக்கவிடக் கூடாது.

முதலமைச்சரைத் தவிர வேறு எந்த அமைச்சரும்தங்கள் தொகுதியைத் தவிர வேறு எங்கும் பிரச்சாரம் செய்ய போவதில்லை. சீமான், கமல் போன்றோரும் பாஜகவின் வேட்பாளர்கள்தான். அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை வெற்றிபெற செய்ய வேண்டும்.” என்றார்.