ADVERTISEMENT

போலீசார் மீது கொலை வழக்கு... சாத்தான்குளத்தில் பட்டாசு வெடித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு வரவேற்பு

12:51 PM Jul 02, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் கூறுகையில், “சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்து நடுநிலையான ஒரு விசாரணை தொடங்கி இருக்கிறது. விசாரணை போகப்போக உங்களுக்கு முடிவு தெரியும். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாலை நேரத்திற்குள் உங்களுக்கு தெரிந்துவிடும் அல்லது இன்று (01.07.2020) இரவுக்குள் உங்களுக்கு முடிவு தெரியும் என்றார்.

அதன்படி இன்று காலைக்குள் சம்மந்தப்பட்ட சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், எஸ்.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், அவர்கள் மீது கொலை வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் புகழேந்தி அமர்வு முன் இன்று (02/07/2020) காலை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சி.பி.சி.ஐ.டி.-யின் நடவடிக்கை உள்ளது. பாதிக்கப்பட்ட தந்தை- மகன் குடும்பத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சி.பி.சி.ஐ.டி. செயல்படுகிறது என நீதிபதிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.

இதனிடையே ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்புக்குக் காரணமான அனைத்து போலீசார்களையும் கைது செய்ய வேண்டும். உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று சாத்தான்குளத்தில் பொதுமக்கள், வியாபாரிகள், ஜெயராஜ், பென்னிக்ஸ் உறவினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தற்போது இருவரின் கொலையில் சம்மந்தப்பட்ட போலீசார்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, சி.பி.சி.ஐ.டி. விசாரணையை வரவேற்று காமராஜர் சிலைக்கு முன்பு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT