/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murugan_76.jpg)
சாத்தான்குளம் இரட்டைக் கொலைக்கு காரணமான போலீஸார் 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது சி.பி.சி.ஐ.டி.போலீஸ்.காலதாமதமாக எடுக்கப்பட்டிருந்தாலும் இந்த அதிரடி நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைக்கு முன்பாக, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன் உட்பட பலரையும் இடமாற்றம் செய்தது எடப்பாடி அரசு. தென்மண்டலத்தின் புதிய ஐ.ஜி.யாக முருகன் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற அரசு முடிவு செய்த நிலையில், சி.பி.ஐ.-யில் ஏற்கனவே முருகன் பணியாற்றியிருப்பதால் அந்த அனுபவம் இந்த வழக்கைச் சரியான திசையில் கொண்டு செல்ல உதவும் என்கிற அடிப்படையில் தென்மண்டல ஐ.ஜி.யாக முருகன் நியமிக்கப்பட்டார் என ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பில் எதிரொலித்தது. மேலும், இதே பதவியில் ஏற்கனவே முருகன் இருந்ததால் உண்மைகளைச் சமரசமின்றி வெளிக் கொண்டு வர உதவும் என்கிற அடிப்படையிலும் முருகன் தேர்வு செய்யப்பட்டார் எனவும் காவல்துறை வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்த நிலையில், தென் மண்டல ஐ.ஜி. பொறுப்பை ஏற்பதற்கு முன்பு, முதல்வர் எடப்பாடியைச் சந்தித்திருக்கிறார் முருகன். அந்தச் சந்திப்பில், ’’சாத்தான்குளம் போலீஸார்தான் குற்றவாளிகள் என்பது நிதர்சனமாக தெரிகிறது. சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்படுவது அவசியம். நீதிமன்றமும் இந்த வழக்கைக் கண்காணிக்கிறது. அதனால், போலீஸ்தான் குற்றவாளிகள் என்பதும், எஃப்.ஐ.ஆரில் பல தவறுகள் இருப்பதும் தெளிவாக இருக்கும் நிலையில், அவர்களைக் கைது செய்வதில் தாமதம் வேண்டாம் என நினைக்கிறேன் ‘’ எனச் சொல்லியுள்ளார் முருகன். வேறு வழியில்லாமல் அவருடைய கருத்தினை ஆமோதித்துள்ளார் முதல்வர் எடப்பாடி.
இந்த நிலையில், ’’சார்ஜ் எடுப்பதற்கு முன்பே சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் பேசிய முருகன், சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். இதனையடுத்தே, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டது சி.பி.சி.ஐ.டி.போலீஸ்!‘’ என்கிறது தமிழக உள்துறை வட்டாரம்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)