ADVERTISEMENT

சாத்தான்குளம்... மேலும் 3 காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி...

06:29 PM Jul 20, 2020 | rajavel

ADVERTISEMENT

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 3 காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரிய நிலையில் மூவரையும் வரும் 23-ம் தேதிவரை 3 நாட்கள் காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ADVERTISEMENT

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கின்போது, கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக போலீஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். சாத்தான்குளத்தில் இருந்து கோவில்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல்நிலை காவலர் முத்துராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமை காவலர் சாமிதுரை, முதல் நிலைக் காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை, தாமஸ் பிரான்க்ளின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை 3 நாட்கள் சிபிஐ போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தலைமை காவலர் சாமிதுரை, முதல்நிலை காவலர்கள் செல்லதுரை, வெயில்முத்து ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது.

இதையடுத்து 3 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி மதுரை தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று (ஜூலை 20) காலை மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி ஹேமந்த்குமார் முன்னிலையில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதியின் முன் தலைமை காவலர் சாமிதுரை, முதல்நிலை காவலர்கள் செல்லதுரை, வெயில்முத்து ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மூவரையும் வரும் 23-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். ஜூலை 23 மாலை மருத்துவப் பரிசோதனை முடித்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி கூறினார். இதனையடுத்து, மூவரும் மருத்துவப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT