Skip to main content

எப்போது விடுதலை? - சிறையில் இருந்து சசிகலா கடிதம்!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

Sasikala


 
சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா, எப்போது விடுதலை ஆவார் என்று அதிமுகவினரிடையேயும், அரசியல் களத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், சசிகலா தனது வழக்கறிஞர் செந்தூர் பாண்டியனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

 

அந்தக் கடிதத்தில், “தங்களுடைய '06.10.20' தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். விவரங்களை அறிந்து கொண்டேன். நாங்கள் நலமாக இருக்கிறோம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

 

'கோவிட்' காரணமாக தமிழக மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் எனக்கு வேதனையை அளிக்கிறது. கோவிட் நோய்த் தொற்று பரவலினால் தமிழகத்தில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்பதும் எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. விரைவில் தமிழக மக்களும் பிற மாநில மக்களும் கோவிட் நோய்த் தொற்றிலிருந்து முற்றிலுமாக மீண்டு, சகஜ நிலை திரும்ப மனதார இறைவனை தினமும் வேண்டி வருகிறேன்.

 

கோவிட் காரணமாக '2020' மார்ச் மூன்றாம் வாரத்திலிருந்து 'நேர்காணல்'களை கர்நாடக சிறைத்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. எப்போது நேர்காணல் அனுமதி அளிக்கப்படும் என்பதும் இதுவரை உறுதியாக தெரியவில்லை.

 

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டபடி, “சிறைத்துறை, எனது நன்னடத்தை ரெமிஷன் விஷயத்தில் விரைவில் சட்டப்படியாக முடிவெடுப்பார்கள் என நான் நம்புகிறேன். உத்தரவு எனக்குக் கிடைத்தஉடன் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அதன்படி ஃபைன் தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும். கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில், ஃபைன் கட்டிய பிறகும், உச்சநீதிமன்றத்தில் '14.02.2017' தேதிய தீர்ப்பு வழக்கு விஷயத்தில் சட்டப்படியாக “குயுரிட்டி மனுவை” தாக்கல் செய்ய இயலுமா என்பதனை மீண்டும் டெல்லி மூத்த வழக்கறிஞர்களிடம் உறுதி செய்யவும். அது பற்றி டி.டி.வி. தினகரனிடம் ஆலோசித்துச் செயல்படவும்.

 

Ad

 

தங்களின் கடித இணைப்பில் அனுப்பிய இணையதளச் செய்தியைப் படித்துப் பார்த்தேன். எனக்குச் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது. உள்நோக்கம் கொண்ட நபர்கள் பரப்பிய விஷமபொய் செய்தியை, உண்மை என நம்பி அந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். நான் வணங்கும் இறைவனின் ஆசியோடும், என் உடன்பிறவா அக்காவின் ஆசியோடும், அவரது கோடிக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளாலும் நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்.

 

அந்த இணையதளச் செய்தி ஊடகம், "ஜெய ஆனந்த் சமீபத்தில் என்னை வந்து சிறையில் சந்தித்ததாகவும், பேசியதாகவும் என் நிலையைப் பார்த்து அதிர்ந்து போனதாகவும், 'அத்தை நீங்க பத்திரமா வெளியே வந்தாலே போதும், தஞ்சாவூரில் இயற்கை சூழ்ந்த பண்ணை வீட்டுல, நீங்க இனி நல்லா ஒய்வு எடுக்கனும். உங்களை எல்லாரும் ரொம்ப புண்படுத்திட்டாங்க இனிமேல் வர்ற காலமாவது நீங்க நிம்மதியா இருக்கணும்' - என என்னிடம் சொன்னதாக", வெளியிட்டுள்ள செய்தியில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை. ஜெய ஆனந்த் என்னைச் சந்திக்கவே இல்லை. 

 

Nakkheeran

 

எதிர்காலத்தில் என் விஷயத்தில் அரசியல் குழப்பங்களை வேண்டுமென்றே ஏற்படுத்த எண்ணுபவர்கள், ஊடகங்கள் வாயிலாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்னைப் பற்றி தவறான செய்திகள் வெளியிடும் பட்சத்தில், உரிய சட்ட விளக்கத்தினை என் சார்பாகத் தரவும், தேவையான சட்ட நடவடிக்கைகளை என் சார்பாக தாங்கள் எடுக்கவும் இக்கடிதத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.

 

ஜெய் ஆனந்தும் சசிகலா போலவே தன்னைப் பற்றி வந்த செய்திகளை மறுத்திருக்கிறார். சசிகலா எழுதிய கடிதம் அதிமுகவினரிடையே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூர் சம்பவம்; மண்ணடியில் என்.ஐ.ஏ. சோதனை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Bangalore Incident; NIA raids mannadi

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில், அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்து தொடர்பான விசாரணையில் அது குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து என்.ஐ.ஏ விசாரணையைக் கையில் எடுத்துள்ள நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய இருவர் கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும், சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர்கள் பயன்படுத்திய தொப்பி சென்னை சென்ட்ரலில் வாங்கியுள்ளதும் உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஷிமோகா ஐ.எஸ். மாடல் வழக்கில் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாகத் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் அப்துல்லா என்பவர் வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை தற்போது சோதனை நடத்தி வருகிறது. பெங்களூர் வழக்கில் தொடர்புடைய இருவர் சென்னையில் தங்கியிருந்ததாக முன்பு தகவல்கள் வெளிவந்த நிலையில், மண்ணடி உள்ளிட்ட ஐந்து இடங்களில் என்.ஐ.ஏ சோதனை தற்பொழுது நடைபெற்று வருகிறது.

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.