Advertisment

ஊரக வேலை நாட்களை 200-ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Rural working days

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 நாட்களாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்; இக்கோரிக்கையைத்தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு தொடர்பாக வெளியாகியிருக்கும் இரு புள்ளி விவரங்கள், இனி வரும் நாட்களில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு நிலைமை எப்படி இருக்கும் என்பதைப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றன. அந்தப் புள்ளி விவரங்கள் காட்டும் சூழலைப்புரிந்து கொண்டு, மக்களின் வாழ்வாதாரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்.

Advertisment

தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் தொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்க்கப்பட்ட புதிய பணியாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் புதிய வேலைவாய்ப்புகள் கணக்கிடப்பட்டுள்ளன. அதன்படி பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 32,499 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், மார்ச் மாதத்தில் 58,948 வேலைவாய்ப்புகள் மட்டும் தான் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் மட்டும் புதிய வேலைவாய்ப்புகள் 56% குறைந்திருப்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்திலும், மே மாதத்தில் இன்று வரையிலும் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாலும், தொழில் நிறுவனங்கள் அதிகபட்சமாக 33% ஊழியர்களுடன் இயங்கி வருவதாலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் இல்லை. அடுத்த சில மாதங்களிலும் அமைப்பு சார்ந்த துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாது என்பதே எதார்த்தம்.

மற்றொரு புறம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் 100% பணியாளர்கள் பணியாற்ற அனுமதிக்கப்பட்ட 24 மாவட்டங்களில், 10 மாவட்டங்களில் நடப்பு மே மாதத்தில் பணிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மே மாதத்தில் பணிக்கு வந்தவர்களின் எண்ணிக்கையை விட 4 மடங்கு வரை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் சராசரியாக பணிக்கு வந்தவர்களை விட இப்போது திருவாரூர் மாவட்டத்தில் 187 விழுக்காட்டினரும், திருநெல்வேலி - தென்காசி மாவட்டத்தில் 159 விழுக்காட்டினரும், மதுரை மாவட்டத்தில் 156 விழுக்காட்டினரும் கூடுதலாகப் பணிக்கு வந்துள்ளனர்.

 ramadoss

தஞ்சாவூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பணிக்கு வந்துள்ளனர். இந்த மாவட்டங்களையெல்லாம் விஞ்சும் வகையில் விழுப்புரம் - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பணிக்கு வந்ததைப் போன்று 400% மக்கள் இந்த மாதத்தில் பணிக்கு வந்திருக்கின்றனர். இது கடந்த காலங்களில் இல்லாத உயர்வாகும்.

மேற்கண்ட இரு புள்ளிவிவரங்களும் சொல்லும் உண்மை என்னவெனில் அமைப்பு சார்ந்த தொழில்களில் வேலைவாய்ப்பு முற்றிலுமாகக் குறைந்து விட்டது. அடுத்த சில மாதங்களுக்கு அங்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் இல்லை. அமைப்புசாராத துறைகள் எப்போது முழுவீச்சில் செயல்படத் தொடங்கும்; அங்கு எப்போது வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதும் தெரியவில்லை. இப்போதைய நிலையில், வருவாய் இல்லாத மக்களுக்கு ஒற்றை வாழ்வாதாரமாக உருவெடுத்திருப்பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தான். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணியாற்றி, வேலை இழந்த மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பி ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிக்க இதுவே காரணமாகும்.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் இப்போது தான் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது என்பதால், இனிவரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல குடும்பங்கள் இரு வேளையாவது பசியாறுவதற்கு இந்தத் திட்டம் தான் காரணமாகும். அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத வேலைவாய்ப்பு சந்தை புத்துயிர் பெறுவதற்கு இன்னும் பல வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பல லட்சம் மக்களின் வாழ்வாதாரம், இத்திட்டமாகவே இருக்கும்.

ஆனால், இத்திட்டத்திற்காக தமிழகத்திற்கு நடப்பாண்டில் இதுவரை ரூ.1436.81 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியுள்ள நிலையில், அதைக்கொண்டு இத்திட்டத்தின்படியான வேலைவாய்ப்புத் தேவைகளை நிறைவேற்ற முடியாது. இத்திட்டத்தின்படி சராசரியாக ஒரு குடும்பத்திற்கு மாதம் 6 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப் படுகிறது; தினமும் ரூ.256 ஊதியம் வழங்கப்பட வேண்டிய நிலையில் சாராசரியாக ரூ.200 மட்டுமே வழங்கப்படுகிறது. அவ்வாறு இருந்தும் கூட, இத்திட்டத்தின் கீழ் அதிகம் பேர் வேலை கோரும் போது, மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியைக் கொண்டு வேலை வழங்குவது சாத்தியமில்லை என்பதே உண்மை.

http://onelink.to/nknapp

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் வறுமையை ஒழிப்பதற்காக வேலை வழங்கும் திட்டம் மட்டுமல்ல; கிராமப்புற பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டி, இந்தியபொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்ய வைக்கும் திட்டமாகும். இத்திட்டத்திற்காக செலவிடப்படும் தொகை உடனடியாக நுகர்வோர் சந்தைக்குச் சென்று பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும். ஆகவே இத்திட்டத்திற்கு எவ்வளவு அதிக நிதி ஒதுக்கப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் வாய்ப்புள்ளது.

தேசிய ஊரக வேலை திட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில், ரூ.61 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் கூடுதலாக ரூ.40,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அத்துடன் கூடுதலாக இன்னொரு ரூ.40,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டால், இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த முடியும். அதன் மூலம் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்க முடியும். அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். எனவே, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 நாட்களாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்; இக்கோரிக்கையை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

pmk Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe