Skip to main content

வதந்திகள் உருவாக்கிய வேதனைகள்..! ஓர் நேரடி விசிட்!

damage car

 

 


தொழில்நுட்பங்கள் படுவேகமாக வளர்ச்சியடைகின்றன. அந்த வளர்ச்சி மனிதனின் மூளையை மழுங்கடிக்கவே செய்கின்றன, இதயத்தை இரும்பாக்கியுள்ளன. கைபேசி குறுஞ்செய்திகள், முகநூல் செய்திகள், வாட்ஸ்அப் குழுக்களில் வரும் தகவல்களை நன்றாக படித்துவிட்டு ஐ.டி துறையிலும், பெரும் பணியில் பணியாற்றும் சமூகம் முதல் கிராமத்தில் விவசாய வேலை செய்யும் நபர்கள் வரை அனைவரும் நம்பவே செய்கின்றனர். அது உண்மையா பொய்யா என கொஞ்சம் கூட யோசிப்பதில்லை. மனிதர்கள் மேல் வைக்கப்படாத நம்பிக்கை கைபேசிகள் மீது வைக்கப்படும் இந்த நம்பிக்கைகள் பெரும் துயரத்தையே தற்போது ஏற்படுத்துகின்றன என்பது நிகழ்கால உண்மை.

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அடுத்த அத்திமூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவர்களை, குழந்தை கடத்த வந்தார்கள் என்கிற தவறான புரிதலோடு கொடூரமாக மக்கள் தாக்க அதில் 65 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது திருவண்ணாமலையில் மட்டுமல்ல கடந்த வாரத்தில் குடியாத்தம் நகரில் மனநலம் பாதிக்கப்பட்ட மொழி தெரியாத வடஇந்திய நபரை, திருட வந்தார் என நினைத்து அடித்து உதைக்க அவர் மாண்டுப்போனார். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்கிற தகவல் தெரியாததால் இறுதி சடங்குக்காக அவரது உடல் மருத்துவமனையில் காத்திருக்கிறது. இதேப்போல் திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரியில் வடஇந்திய தொழிலாளி ஒருவரை அடித்து கொலை செய்துள்ளார்கள்.

மக்களின் சந்தேகத்தால், யார், என்ன என விசாரிக்கும் மனநிலையின்றி தாக்குதலில் குதிக்க இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதுமட்டும்மல்ல சந்தேக தாக்குதலால் அடிஉதை வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இந்த போக்கு வடதமிழகத்தில் தான் உள்ளது. இந்த சந்தேக தாக்குதல்களை குறைக்க காவல்துறை தரப்பில் இருந்து தரப்படும் எச்சரிக்கையையும் மீறி குழந்தை கடத்த வந்தார்கள், திருட வந்தார்கள் என சந்தேகப்பட்டு விசாரிக்காமல் அடித்து உதைத்துவிட்டு இன்று பெரும் சட்ட சிக்கலில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள் மக்கள்.

அதிக பாதிப்புக்குள்ளான அத்திமூர், களியம், தம்புக்கொட்டான்பாறை, காமாட்சிபுரம், திண்டிவனம், தானியாறு, ஜமீன்புரம் கிராமங்களுக்கு நேரடி விசிட் சென்றபோது, இந்த கிராமங்களில் உள்ள 1000க்கும் அதிகமான வீடுகள், கடைகள் பூட்டப்பட்டிருந்தன. இந்த கிராமங்களுக்கு வந்து சென்ற மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. 14 வயதுக்குட்பட்ட சிறார்கள், வயதானவர்கள், சிலச்சில பெண்கள் மட்டுமே இருந்தனர். நம்மை பார்த்ததும், போலீஸ் மப்டியில் வந்திருக்கு என பயந்து ஓடினர். அவர்களில் சிலரை தடுத்து நிறுத்தி நான் போலீஸ் இல்லை, பத்திரிக்கையாளன் என எடுத்துக்கூறி பேசியபோது,

 

 


குழந்தை கடத்தறாங்கன்னு வாட்ஸ்அப்ல வீடியோ வருது, இதை பசங்க காட்டுதுங்க. நாங்கயெல்லாம் கிராமத்தாளுங்க. புள்ளையை பெத்துட்டு 3 வயசா இருக்கும்போதே வீட்டுல விளையாட விட்டுட்டு, வீட்லயிருக்கற கெழடு கட்டைங்கக்கிட்ட சொல்லிட்டு கழனி வேலைக்கு போய்டுவோம். அதுங்க தண்ணீயோ, பாலோ குடிச்சிட்டு விளையாடிக்கிட்டோ, தூங்கிக்கிட்டோ கிடக்கும். மதியம் வந்து சோறு தருவோம். புள்ளைய தனியா விட்டுட்டு போனாலும் மனசெல்லாம் கிடந்து அடிச்சிக்கும். மனசு அடிச்சிக்குதுன்னு வீட்லயே இருக்கவும் முடியாது. வேலைக்கு போனதான் சோறு.
 

atthimur public


தனியா இருக்கற குழந்தையை கடத்திக்கிட்டு போறாங்க அப்படிங்கற தகவலை கேட்கறப்ப ஈரகுலை நடுங்கும். குழந்தை காணாம போச்சின்னா பெத்தவங்க மனசு எப்படியிருக்கும். நாங்க குழந்தையை வீட்ல விட்டுட்டு போறோம். குழந்தையை யாராவது தூக்கிட்டு போய்ட்டாங்கன்னா என்ன செய்யறதுன்னு அடிச்சிக்கிட்டு கிடந்தது. புள்ளையை கடத்த வந்தாங்கன்னா என்ன செய்வோம், கோபத்தல நாலு சாத்து சாத்தி அனுப்புவோம். அப்படித்தான் குழந்தையை கடத்த கார்ல வந்தாங்கன்னு சொல்ல பயத்தல இருந்த குழந்தை வச்சியிருக்கறவங்க ஆளுக்கு நாலு சாத்து சாத்தியிருக்காங்க, ஒருத்தர் செத்துப்போய்ட்டாங்க.

 

 

இப்பவந்து போலிஸ் அவுங்க குழந்தை கடத்தறவங்கயில்ல, கோயிலுக்கு வந்தவங்கன்னு சொல்லுது. நாங்க கிராமத்துக்காரங்க. குழந்தை கடத்தறாங்க அப்படிங்க பீதியில வேலைக்கு கூட போகாம சிலர் வீட்ல கிடக்கோம். அப்போ போலிஸ் வந்து குழந்தை கடத்தறாங்கன்னு சொல்றதெல்லாம் பொய், அந்த மாதிரி கும்பல் எதுவும் கிடையாதுன்னு சொல்லியிருக்கலாம் எதுவும் சொல்லல. இப்ப வந்து அப்பாவிய அடிச்சி கொன்னுட்டிங்கன்னு வீடு வீடா புகுந்து ஆம்பளைங்கள இழுத்துட்டு போய் ஜெயில்ல தள்ளறாங்க. அடுத்து பொம்பளைங்களையும் இழுத்துட்டு போய் ஜெயில்ல போடப்போறாங்கன்னு சொல்றாங்க. இதனால பொம்பளைங்களும் வீட்லயில்ல பயந்துப்போய் ஊரை விட்டே போய்ட்டாங்க என்றார்கள்.
 

land


மேற்கண்ட ஊர்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் தலைமறைவாகியுள்ளதால் வயல்வெளிகளில் நெல்நாற்று நடப்படாமல் வயலில் காய்ந்துக்கொண்டு இருந்தன. 50க்கும் அதிகமான ஏக்கர் நெல் அறுவடைக்காக காத்திருந்தன. பசுக்களுக்கு தீனி வைக்க ஆள் இல்லாமல் படுத்துக்கிடந்தன. வயதானவர்கள் மட்டும் மரத்தின் கீழ் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தார்கள். அவசரத்துக்கு உப்பு வாங்கக்கூட கடைகள்யில்லை என்றார் சண்முகம் என்கிற பெரியவர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை தரப்பிலோ, பெண்களை கைது செய்வோம் என்பதும் வதந்தி தான் என்கிறார்கள்.

மக்கள் வதந்திகளை நம்பியதன் விளைவாக உயிர்கள் பலியானதோடு, அந்த உயிர் பலிக்கு காரணமான பகுதி மக்கள் தங்களது வீடு, வாசல்களை விட்டுவிட்டு சட்டத்துக்கு பயந்து தலைமறைவாக நாடோடியாக வாழ்கின்றனர் என்கிற தகவல் வேதனையை தருகிறது.

அதனால் எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்தாமல் நம்பாதீர்கள். வதந்திகளை நம்பி வேதனைப்படாதீர்கள்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்