Skip to main content

டீ குடிப்பதற்கு ரூ.5 லட்சமாம்! போலீஸ் உதவி கமிஷனர் அலப்பறை!

assss

 

கள்ளன் பெரிதா? காப்பான் பெரிதா? என்ற கண்ணாமூச்சி ஆட்டத்தில் இருவருமே இப்போது மாட்டிக்கொண்டார்கள். ஏனென்றால், காப்பானும் கள்ளனாகிவிட்ட கொடுமைதான்! கள்ளனும் காப்பானும் ஒருவரை ஒருவர் மாட்டிவிட்டதில், சிரிப்பாய் சிரிப்பதென்னவோ காவல்துறைதான்! சரி, விஷயத்துக்கு வருவோம்!

கடத்தல் குற்றவாளிகளிடம் காக்கிகள் நடத்திய பேரம்!

குற்றவாளியுடன் பேரம் பேசியதாக வெளியான வாட்ஸ்-ஆப் ஆடியோவில் சிக்கிய தேனாம்பேட்டை ஏ.சி. முத்தழகை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் டிஜிபி டி.கே.ராஜேந்திரன். 

 

காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்தறிந்த  ஏ.சி.முத்தழகு குறித்த தகவல்கள் இதோ -  

சில மாதங்களுக்கு முன், ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் வாரிசான கார்த்திக் சேதுபதி நெல்லையில் கடத்தப்பட்டபோது,  பலகோடி ரூபாய் பெறுமான அவருடைய சொத்து அபகரிக்கப்பட்டிருக்கிறது.   இந்த வழக்கில், ராக்கெட் ராஜா, அவனுடைய கூட்டாளிகள் பிரகாஷ், ராஜாசுந்தர், சுந்தர், நந்தகோபால் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

கைது சம்பவத்தின் ‘ஃப்ளாஷ்பேக்’ என்னவென்று பார்ப்போம்!

சென்னை – தேனாம்பேட்டையில் வசித்து வருகிறார் கார்த்திக்சேதுபதி. தான் கடத்தப்பட்டது குறித்து தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏ.சி. முத்தழகு ஆகியோர் விசாரணை நடத்தினர். மே 7-ஆம் தேதி,  ராக்கெட் ராஜாவையும் அவனுடைய கூட்டாளிகளையும் சென்னையில் உள்ள ஹயாத் ஓட்டலில் வைத்து கைது செய்தனர்.  குற்றவாளிகள் பேரத்துக்கு படியவில்லை என்பது அவர்கள் கைதானதன் பின்னணியில் உள்ளது. ஆடியோவில் பதிவான ஏ.சி.முத்தழகுவின் பேச்சு, நடந்த பேரத்தை உறுதி செய்கிறது.   

 

பிரகாஷ், குற்றவாளி சுந்தரின் அண்ணன் ஆவான். அவனை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக ஏ.சி. முத்தழகு முதலில் பேரம் பேசியிருக்கிறார். அவரது உத்தரவின்பேரிலேயே கிரைம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் இடம்பெற்றிருந்த போலீசார் நெல்லை சென்று மேற்கண்ட அக்யூஸ்டுகளைத் தேடினர். அந்த நேரத்தில், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சென்னையில் இருந்தபடியே குற்றவாளிகளிடம் பேரம் பேசி ரூ.25 லட்சத்தை வாங்கிக்கொண்டு, அவர்களைத் தப்பவிட்டார். அதனால்,  தேடிச்சென்ற தனிப்படை போலீசார் வெறும்கையோடு சென்னை திரும்ப வேண்டியதாயிற்று. இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரின் கை ஓங்கியிருப்பதை, தாமதமாகவே உணர்ந்த ஏ.சி. முத்தழகு, தானே களத்தில் இறங்கி ‘டீல்’ பேசினார். அந்த உரையாடல்தான் வாட்ஸ்-ஆப்பில் வெளியானது. 

 

பழி தீர்த்த குற்றவாளிகள்!

ஆடியோவில் ஒரு இடத்தில், “எனக்கு ரூ.5 லட்சமா? எதுக்கு டீ குடிக்கவா?” என்று கிண்டலாக கேட்கும் ஏ.சி.முத்தழகு, “அதைக் கொண்டுபோய் இன்ஸ்பெக்டர் விஜயகுமார்கிட்ட கொடுடா லூஸுப் பயலே” என்பார். இன்ஸ்பெக்டருக்கு ரூ.25 லட்சம், ஏ.சி.யான எனக்கு ரூ.5 லட்சமா என்ற எரிச்சலில்தான் இப்படி பேசினார். இந்த விவகாரம் லீக் ஆனதாலேயே,  இப்போது காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார் ஏ.சி.முத்தழகு. 

‘கேட்ட லஞ்சத்தைக் கொடுக்காததால்தானே,  எங்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது  உங்கள் அதிகாரம். லஞ்சம் கேட்ட உங்களை நாறடிக்க எங்களாலும் இயலும்.’ என்று ஏ.சி.முத்தழகு நடத்திய பேரத்தை வாட்ஸ்-ஆப்பில் வெளியிட்டு, பழி தீர்த்திருக்கிறது சுந்தர் தரப்பு. 

“அது என் உரையாடலே அல்ல” என்று ஏ.சி.முத்தழகு ஒரே போடாகப் போட, “ஏ.சி. எப்படி பேசுவாருன்னு எங்களுக்குத் தெரியாதா? அது அவரோட குரல்தான்.” என்று அடித்துச் சொல்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.  

 

ஏ.சி. கேட்ட பார்க் ஓட்டல் பால்!

லஞ்சப் பேரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், “அடப்பாவிகளா, நாங்க சாப்பாடு, தண்ணியில்லாம, ஊர் ஊரா அலைஞ்சு அக்யூஸ்டுகளை தேடிக்கிட்டிருந்தா, ஆபீசர் சீட்ல உட்கார்ந்துக்கிட்டு, நோகாம லட்சத்துல பேரம் பேசி நீங்க மஞ்ச குளிக்கிறீங்க.“ என்று தனிப்படை போலீஸ்காரர்கள் புலம்பித் தீர்த்துவிட்டு, பால் வாங்கிய கொடுமையையும் எடுத்துவிட்டார்கள். 

 

“ஏ.சி.முத்தழகு அய்யாவுக்கு எப்போதும், பார்க், பாம்குரோவ், புகாரி போன்ற காஸ்ட்லியான ஓட்டல்களில் இருந்துதான் சாப்பாடு வரும். சில நாட்களுக்கு முன்,  சென்னை – செம்மஞ்சேரியில் நள்ளிரவில் ஒரு கொலை நடந்தது. அந்த ஏரியா ஏ.சி. விடுப்பில் இருந்ததால், ஜே.சி. மஹேஸ்வரி, தேனாம்பேட்டை ஏ.சி. முத்தழகை அங்கு அனுப்பி, நிலைமையை கண்காணிக்கச் சொன்னார். அங்கே போன முத்தழகு ஐயா,  அதிகாலை 2 மணிக்கு, பார்க் ஓட்டலில் இருந்து பால் வாங்கி வருமாறு, தேனாம்பேட்டை ஸ்டேசனில் சொன்னார். நுங்கம்பாக்கம் – தேனாம்பேட்டை எல்லையில் உள்ள பார்க் ஓட்டலுக்கும், செம்மஞ்சேரிக்கும் இடைப்பட்ட தூரம் 22 கி.மீ. ‘பால் வாங்குவதற்காக ஏரியாவிட்டு ஏரியா போய், எனக்கு ஏதாவது நடந்தால் யார் பொறுப்பு?’ என்று ஏட்டய்யா முனக, செம்மஞ்சேரியிலேயே ஏசி முத்தழகு அய்யாவுக்கு பால் வாங்கிக் கொடுத்தார்கள். அவரும், ‘பார்க் ஓட்டல்ல பால் வாங்கலியா?’ என்று எரிச்சல்பட்டு குடித்தார்.   

மாநகர காவல்துறை அதிகாரிகளின் நாக்கு ருசிக்கும்,   கை அரிப்புக்கும், ஏ.சி. முத்தழகு ஒரு சாம்பிள்தான்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்