Advertisment

ஆர்.கே.சுரேஷ் சொன்ன அந்த ஒரு தகவல்; சூடுபிடித்த ஆருத்ரா விவகாரம்

RK Suresh who received money from Rousseau; Intensification of investigation into Arudra issue

Advertisment

சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிறுவனம் முதலீடு செய்த ஒரு லட்சம் முதலீட்டாளர்களை ஏமாற்றி 2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மோசடியில் பாஜகவின் ஓபிசி பிரிவு துணைத் தலைவராக இருக்கும் நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கையில் எடுத்துள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஆர்.கே. சுரேஷுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால் ஆஜராகாத ஆர்.கே. சுரேஷ் திடீரென தலைமறைவானார். இந்த சூழலில் வெளிநாட்டிலிருந்த ஆர்.கே. சுரேஷ் துபாயிலிருந்து நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். அவரிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ஆருத்ரா கோல்டு மோசடி தொடர்பாக நடிகர் ஆர்.கே. சுரேஷிடம் சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் முன்பு நேற்று காலை விசாரணைக்கு ஆஜரானார்.

பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் ஆஜரான ஆர்.கே. சுரேஷிடம் நேற்று, முதல் நாளில் நடைபெற்ற 7 மணி நேர விசாரணை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆர்.கே. சுரேஷ் பேசுகையில், “ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. உடல் நலக் குறைவால் மனைவி ஐ.சி.யூ.வில் இருந்ததால் வெளிநாட்டில் இருந்து வந்தோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். நாளையும் ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

Advertisment

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் ஆர்.கே. சுரேஷை இன்றும் ஆஜராக போலீசார் உத்தரவிட்டிருந்தனர். நேற்று ஆர்.கே.சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரூசோ என்பவரிடம் வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் கோடி கணக்கில் பணம் பெற்றது தெரியவந்துள்ளது. திரைப்பட தயாரிப்புக்காக இந்த தொகை வாங்கியதாக கூறப்படுகிறது. 'ஒயிட் ரோஸ்' என்ற படத்திற்காக இந்த பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த பணத்தை ஆர்.கே.சுரேஷ் தனது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களை கேட்டு இன்று ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்திருந்தனர்.

உண்மையிலேயே இந்த பணமானது படத்திற்காக வாங்கப்பட்டதா அல்லது கட்சி அல்லது வேறு விவகாரத்திற்காக வழங்கப்பட்டதா என்பது இன்று நடைபெறும் விசாரணையில் தெரியவரும் என்று கூறப்படுகிறது. ஆர்.கே.சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை வரும் 18ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் அளிக்க உள்ளனர்.

aarudhra money police
இதையும் படியுங்கள்
Subscribe