Skip to main content

தூத்துக்குடியில் அமைதி திரும்ப ஒரு நல்லிணக்கக் குழுவை நியமிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Published on 23/05/2018 | Edited on 23/05/2018
stalin


தூத்துக்குடியில் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களையும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கடந்த இரு தினங்களாக தூத்துக்குடி மாநகரம் மிகப்பெரிய அமளிக்காடாக மாறியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்தவர்களின் குடும்பங்கள் சோகத்தில் தவித்து வருகின்றன. நியாயமாக, தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் தூத்துக்குடிக்கு நேரில் வந்து, ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்ற செய்தியை சொன்னால்தான், இங்கு அமைதி ஏற்படும் சூழல் இருக்கிறது. ஆனால், இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், தங்களுடைய பதவிகள் இருந்தால் மட்டும் போதும் என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமியும், அவரோடு இருக்கின்ற அமைச்சர்களும் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். இங்கு நேரடியாக வந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வராத முதலமைச்சரும், அமைச்சர்களும், காவல்துறை டி.ஜி.பி.யும் அந்தப் பொறுப்புகளில் இருப்பதற்கே லாயக்கற்றவர்கள்.

நேற்று நடைபெற்றுள்ள கொடுமையான துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் இறந்துள்ளனர். இப்போது பாதிக்கப்பட்டவர்களை நான் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தபோது கூட மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்று இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, காட்டுமிராண்டித்தனமாக மக்களை தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் சாவின் எல்லைக்கு கொண்டு சென்று கொண்டு இருக்கும் காவல்துறைக்கு தலைமைப் பொறுப்பில் இருக்கின்ற டி.ஜி.பி. ராஜேந்திரன் அவர்களும் பதவி விலக வேண்டும். அதேபோல, இந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை பணியிடம் மாற்ற உத்திரவிட்டு, புதியவர்களை நியமித்தால் மட்டுமே, இந்த மாவட்டத்தில் சுமுகமான நிலை திரும்பும். அதுமட்டுமின்றி, இந்தப் பகுதியில் ஒரு நல்லிணக்கக் குழுவை அரசே நியமித்து, அந்தக் குழுவின் மூலமாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

செய்தியாளர்: தலைமைச் செயலாளரை நீங்கள் சந்தித்தபோது என்ன கூறினார்?

பதில்: முதலமைச்சர் எப்படி எதுபற்றியும் கவலைப்படாமல் அமைதியாக இருக்கிறாரோ, அதேபோல அவரும் அமைதியாக இருந்துகொண்டு, நாங்கள் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறோம், குழு அமைத்திருக்கிறோம் என்று சொன்னாரே தவிர, எந்த நடவடிக்கையும் எடுத்ததாக சொல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சமூக விரோதிகளை எதிர்த்து கேள்விகேட்காத திமுகவும்தான் 13 பேர் கொலைக்கு காரணம்!! -பொன்.ராதாகிருஷ்ணன்

Published on 30/06/2018 | Edited on 30/06/2018

 

pon

 

 

 

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுடப்பட்டதற்கு சமூக விரோதிகளை கேள்விகேட்காத திமுகவே காரணம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.  

 

இன்று கன்னியாகுமரி நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

 

தூத்துக்குடியில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பே காரணம். அமைதியாக நடந்த போராட்டத்தில் ஒரு பகுதி மக்களை திசை திருப்பி கொலைக்களமாக மாற்றிய அந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் வருங்காலத்தில் இன்னும் நிறைய தூத்துக்குடி சம்பவங்களை போன்ற பல தூத்துக்குடி சம்பவங்கள்  உருவாக இதுவே காரணமாக இருந்துவிடும்.

 

 

 

மக்கள் அதிகாரம் அமைப்பு மட்டுமல்ல மக்கள் போராட்டத்தை திசை திருப்பிய அனைத்து அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அமைப்புகள் மட்டுமல்ல, அந்த சமூக விரோதிகளை எதிர்த்து கேள்விகேட்காத திமுகவும்தான் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் நடந்த 13 பேர் கொலைக்கு காரணம் எனக்கூறினார்.  

Next Story

நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்: ரஜினிகாந்த்

Published on 30/05/2018 | Edited on 30/05/2018


நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கல் வீச்சு, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதில் போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்தார். இதேபோல், நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பல அரசியல் தலைவர்ளும், சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற இன்று தூத்துக்குடி செல்கிறார். இதுகுறித்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை சந்திக்க செல்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி. நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன். சட்டப்பேரவை கூட்டத்தொடரை திமுக புறக்கணித்தது குறித்து தான் கருத்து கூற விரும்பவில்லை.

தூத்துக்குடி சம்பவத்திற்கு திமுகதான் காரணம் என முதலமைச்சர் குற்றச்சாட்டு குறித்த பதில் அளித்த ரஜினி, திமுகவை அதிமுகவும், அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது தான் அரசியல், பழைய நிகழ்வுகளை பேசி பயனில்லை.

காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதித்திருப்பது குறித்து கேட்ட போது, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பேச்சு நடத்தி சுமூக தீர்வு காணும் என்றார்.