Skip to main content

பி.என்.பி. விவகாரத்தில் அருண் ஜேட்லியின் மவுனத்திற்கு இதுதான் காரணம்!

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மெகா மோசடி விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மவுனமாக இருப்பதற்கு அவரது மகள்தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

 

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பையில் உள்ள கிளையில் மாபெரும் பணமோசடி நடைபெற்றது. இந்தக் கிளையில் ரூ.12,600 கோடி மோசடி செய்த நீரவ் மோடி மற்றும் மேகுல் சோக்ஸி ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பியோடினர். இந்த விவகாரத்தில் வங்கி ஆடிட்டர்களே காரணம் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்து வந்தார்.

 

 

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ‘பஞ்சாப் நேஷனல் வங்கியின் பணமோசடி விவகாரத்தில் அருண் ஜேட்லி ஏன் இத்தனை நாள் மவுனமாக இருந்தார் என்பதற்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது. இந்த மிகப்பெரிய பணமோசடி வெளிச்சத்திற்கு வருவதற்கு முன்பு வழக்கறிஞரான அவரது மகள், சம்மந்தப்பட்ட குற்றவாளிகளின் மிகப்பெரிய ஒப்பந்ததாரர் என்பதுதான் அந்த காரணம். அது இப்போது அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இந்த விவகாரத்தில் பல சட்ட நிறுவனங்களை ரெய்டு நடத்திய சி.பி.ஐ., ஏன் அவரது மகள் நிறுவனத்தில் சோதனை நடத்த தயங்குகிறது?’ என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அது தொடர்பாக தி வயர் இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரையையும் அவர் இணைத்துள்ளார். 

 

அந்தக் கட்டுரையில் அருண் ஜேட்லியின் மகளுடைய ஜேட்லி-பக்‌ஷி சட்ட நிறுவனம் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்துடன் ஒருமாத காலத்திற்கான ஒப்பந்தம் போடப்பட்டதற்கான ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன.

சார்ந்த செய்திகள்