ஆர்.பி.ஐ. அதிகாரிகளை விட திருப்பதி கோவில் நிர்வாகிகள் பணத்தை வேகமாக எண்ணுவார்கள் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இந்தியத் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் 84ஆவது மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘1990ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி தூவிய தாராளமயக் கொள்கையின் விதைதான், தற்போதைய கட்ட பொருளாதார வளர்ச்சிக்கு உதவிக்கொண்டிருக்கிறது. இது மன்மோகன் சிங் ஆட்சியில் மேலும் உத்வேகம் பெற்றது. பா.ஜ.க.வோ, தேசிய ஜனநாயகக் கூட்டணியோ என்ன சொன்னாலும், தரவுகளே உண்மையைப் பேசுகின்றன’ எனக் கூறினார்.
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், ‘ஆர்.பி.ஐ. அதிகாரிகள் ஏன் திருப்பதியில் இருக்கும் உண்டியலை எண்ணும் வேலைக்குப் போகக்கூடாது என்று நான் கேட்பேன். அங்கிருப்பவர்கள் உங்களைவிட வேகமாக சில்லரைகளை எண்ணுவார்கள்’ எனவும் கிண்டலடிக்கும் விதமாக பேசியுள்ளார்.