அம்பேத்கரின் பெயருக்கு நடுவில் ராம்ஜியை சேர்த்துக்கொள்ள உத்தரப்பிரதேச அரசு முடிவுசெய்துள்ளது. அதுகுறித்த அறிவிப்புகளும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேச மாநில அரசு நேற்று அரசுத்துறைகளுக்கும், லக்னோ மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற அமர்வுகளில் இடம்பெற்றுள்ள ஆவணங்களிலும், பதிவுகளில் அம்பேத்கரின் பெயரில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி டாக்டர். பீம்ராவ் அம்பேத்கர் என்ற பெயருக்கு நடுவில் அவரது தந்தையின் பெயரான ராம்ஜி இணைக்கப்பட்டு, டாக்டர். பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என மாற்றப்படும். அம்பேத்கர் பல இடங்களில் தனது கையெழுத்தில் முழுப்பெயரையும் குறிப்பிட்டு வந்துள்ளார் எனவும் இதற்காக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அம்பேத்கர் (Ambedkar) என்ற ஆங்கில உச்சரிப்பில் இருப்பதுபோல் அல்லாமல், இந்தியில் (Aambedkar) என்றே உச்சரிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உபி மாநில ஆளுநர் ராம் நாயக் இதுகுறித்த பரிந்துரையை கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்வைத்தார். மேலும், பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் மகாசபை உள்ளிட்ட அமைப்புகளுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், மகாராஷ்டிரா மாநில வழக்கப்படி தந்தையின் பெயர் நடுவில் இருக்கவேண்டும் என்பதால் இந்த முறையைக் கடைப்பிடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.