Skip to main content

தமிழர்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும்: ரஜினிகாந்த் எச்சரிக்கை!

Published on 08/04/2018 | Edited on 08/04/2018


காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்காவிடில், அனைத்து தமிழர்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும் என நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தென்னிந்திய நடிகர் சங்கம், ஃபெப்ஸி, தயாரிப்பாளர் உள்ளிட்ட திரையுலக சங்கங்கள் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக சென்னை போயஸ்கார்டன் இல்லத்திலிருந்து புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வாரியம் அமைப்பதற்கான திட்டங்களை தயார் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பில் உறுதியாக கூறியுள்ளது. ஆனால் மத்திய அரசு இதற்கு ஒத்துழைக்கவில்லை. கர்நாடக, கேரள அரசும் இதனை ஒத்துக்கொள்ளவில்லை. திட்டங்கள் என்றால் என்ன? என காலத்தை தாமதப்படுத்துகிறது.

நான் மத்திய அரசுக்கு சொல்வது ஒன்று தான், அனைத்து தமிழர்களின் நியாமான கோரிக்கை, காவிரி மேலாண்மை வாரியம். அனைத்து தமிழர்களின் வலுவான ஒரே குரல், காவிரி மேலாண்மை வாரியம். இது எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் அமைக்காவிடில் அனைத்து தமிழர்களின் கோபத்திற்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைய பல்வேறு அரசியல் கட்சிகள், வியபாரிகள் சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள் எல்லாம் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்காக போராடும் நாம் விவசாயிகளை முன்னிறுத்த வேண்டும். ஊடகங்கள் அவர்கள் முகத்தை காட்ட வேண்டும். அவர்களின் கஷ்டங்கள், வேதனைகளை முன்னிறுத்த வேண்டும். ஏழை விவசாயிகளின் கஷ்டத்தத்தை கர்நாடக அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் அங்குள்ள விவசாயிகள் புரிந்து கொள்வார்கள் இது நம் போராட்டத்திற்கு வலு சேர்க்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்