/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/conrahulni.jpg)
நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தொடர், வரும் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தொடரில், அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75வது ஆண்டு எட்டியதை குறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு வருகிறதுது. இந்த விவாதத்தை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவையில் நேற்று (13-12-24) தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் அரசியலமைப்பு சாசனம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினர்.
இந்த நிலையில், இன்று (14-12-24) மக்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அரசியலமைப்பு சாசனம் மீதான விவாதத்தில் பேசினார். அதில் அவர் பேசியதாவது, “அரசியலமைப்பு சாசனத்தைப் பற்றியும், இந்தியா எவ்வாறு இயங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் சாவர்க்கர் பேசியதை சுட்டிக்காட்டி நான் இங்கு பேச விரும்புகிறேன்.
‘இந்திய அரசியலமைப்பின் மோசமான விஷயம் என்னவென்றால், அதில் இந்தியர்கள் குறித்து எதுவும் இல்லை. நமது இந்து தேசத்திற்கு வேதங்களுக்குப் பிறகு, மிகவும் வணங்கப்படக்கூடிய வேதம் மனுஸ்மிருதியாகும். நமது கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனை மற்றும் நடைமுறைக்கு அடிப்படையாக மனுஸ்மிருதி இருக்கிறது. இந்த புத்தகம், பல நூற்றாண்டுகளாக, நமது தேசத்தின் ஆன்மீக மற்றும் தெய்வீக பயணத்தின் குறியீடாக இருக்கிறது. இன்று மனுஸ்மிருதி என்பது தான் சட்டம்’ என்று சாவர்க்கர் கூறினார். அவர், தனது எழுத்துக்களில் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியர் குறித்து எதுவும் இல்லை என்று தெளிவாகக் கூறியுள்ளார். இந்தியா நடத்தும் புத்தகமான அரசியலமைப்பு புத்தகத்தை, மனுஸ்மிருதி புத்தகத்தால் முறியடிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
தற்போது நடப்பது, இந்த இரண்டு புத்தகங்களுக்கு இடையிலான போராட்டம். உங்கள் தலைவரின் வார்த்தைகளில் நீங்கள் துணை நிற்கிறீர்களா? உங்கள் தலைவரின் வார்த்தைகளை ஆதரிக்கிறீர்களா? என்பதை நான் ஆட்சியாளர்களிடம் கேட்க விரும்புகிறேன். ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது பற்றி நாடாளுமன்றத்தில் பேசும்போது, ​​நீங்கள் சாவர்க்கரை கேலி செய்கிறீர்கள், சாவர்க்கரை அவதூறாகப் பேசுகிறீர்கள்.அரசியல் சாசனம் என்பது நவீன இந்தியாவின் ஆவணம். அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை திறக்கும்போது, ​​அம்பேத்கர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் குரல்களையும், சிந்தனைகளையும் நாம் கேட்கலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/conrahu.jpg)
இந்தியா கூட்டணியின் கொள்கையால், நாட்டின் அரசியலமைப்பைக் கொண்டுவந்து, நாங்கள் ஒன்றாக அரசியலமைப்பைப் பாதுகாப்போம். அரசியல் சமத்துவம் இருந்தும் சமூக, பொருளாதார சமத்துவம் இல்லாவிட்டால் அரசியல் சமத்துவம் அழிந்து விடும் என்று அம்பேத்கர் கூறினார். அரசியல் சமத்துவம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவின் அனைத்து நிறுவனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சமூக சமத்துவம் இல்லை. பொருளாதார சமத்துவம் இல்லை. அதனால்தான், நமது அடுத்த கட்டமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். யாருடைய கட்டைவிரலை வெட்டினீர்கள் என்பதை நாட்டுக்கு காட்ட விரும்புகிறோம். பட்டியலினத்தவர்கள், பழங்குடியினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், தொழிலாளர்களின் கட்டைவிரல்கள் வெட்டப்பட்டவர்களைக் காட்ட விரும்புகிறோம். எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இந்தியாவில் புதிய வளர்ச்சி ஏற்படும்” என்று ஆவேசமாகப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)